வெளியிடப்பட்ட நேரம்: 01:13 (14/03/2018)

கடைசி தொடர்பு:09:13 (14/03/2018)

சம்மர் ஸ்பெஷல்: மேட்டுப்பாளையம் டூ குன்னூர் சிறப்பு மலை ரயில் சேவை..!

கோடை விடுமுறையை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே சிறப்பு மலை ரயில் சேவையை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

மலை ரயில்

சம்மர் சீஸன் விரைவில் தொடங்க உள்ளது. விடுமுறையைக் கழிக்க இப்போதே பலர் திட்டமிட ஆரம்பித்திருப்பார்கள். அதில் பெரும்பாலானோர்களுக்கு முதல் சாய்ஸாக இருப்பது நீலகிரிதான். அதிலும், மலை ரயிலில் பயணிப்பதற்காகவே சிலர் நீலகிரிக்கு ட்ரிப் அடிப்பார்கள். இதையடுத்து, சம்மரில் மலை ரயில் சிறப்பு சேவை இயக்க வேண்டும் என்று மலை ரயில் பிரியர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  “மார்ச் 31-ம் தேதி முதல் ஜூன் 24-ம் தேதி வரை அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே நீராவி இஞ்சின் மூலம் (26+26 மொத்தம்) 52 பாரம்பரிய கோடைக்கால சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயிலில் 2 முதல் வகுப்பு மற்றும் 1 இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டிகள் இருக்கும். இந்த ரயில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு, கல்லார், ஹில்குரோவ் வழியாக பயணித்து குன்னூரை மதியம் 12.30 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் மதியம் 1.30 மணிக்கு குன்னூரில் இருந்து புறப்பட்டு, மேட்டுப்பாளையத்தை மாலை 4.20 மணிக்கு வந்தடையும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று (14.03.2018) காலை 8 மணி முதல் தொடங்க உள்ளது.

கட்டண விவரம்:

முதல் வகுப்பு: மேட்டுப்பாளையம்-குன்னூர் பெரியவர்களுக்கு Rs.1100/- குழந்தைகளுக்கு Rs.650/-(5 முதல்12 வயது வரை)

இரண்டாம் வகுப்பு: மேட்டுப்பாளையம்-குன்னூர் பெரியவர்களுக்கு Rs.800/- குழந்தைகளுக்கு Rs.500/-(5 முதல்12 வயது வரை)

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு வாங்க வேண்டியதில்லை” என்று கூறப்பட்டுள்ளது.