காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டம்..! அய்யாக்கண்ணு அறிவிப்பு.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி டெல்லியில் தூக்கில் தொங்கும் போராட்டம் நடத்துவோம் என தென் இந்திய நதிகள் இணைப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

சாயல்குடியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு

தென் இந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் சார்பில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைக் கொண்டு விவசாயம் செய்வதைத் தடை செய்யக்கோரி குமரி முதல் கோட்டை வரை விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடிக்கு இதன் ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு தலைமையில் வந்த இந்த பிரச்சார குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறுகையில், 'மத்திய அரசு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் டெல்லியில் இம்மாதம் 29-ம் தேதி தூக்கில் தொங்கும் போராட்டத்தினை நடத்துவோம். கர்நாடகத்தில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால் மத்திய அரசு மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலம் தாழ்த்துகிறது.

தமிழகத்தில் மத்திய அரசின் தலையீடு அதிகமாக உள்ளது. தமிழக விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டிய மாநில அரசு பெயரளவிற்கு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. ஓட்டுக்கு பணம் கொடுத்தால் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என எண்ணி விவசாயிகளை அரசு வஞ்சிக்கிறது. மகராஷ்டிராவில் விவசாயிகள் ஒன்று திரண்டு போராடி வெற்றி பெற்றுள்ளனர். அதே நிலை இங்கும் உருவாகும். மத்திய அரசு தமிழகத்தில்

விவசாயிகளை விரட்டி விட்டு அவரகளது கட்சிக்கு நிதி கொடுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களை நிறுவ முயல்கிறது. இதன் ஒரு பகுதியாகத்தான் கமுதியில் விவசாய நிலங்களை அழித்து சோலார் பவர் நிறுவனத்தை நிறுவியுள்ளனர். முதுகுளத்தூர் தொகுதியில் உள்ள குண்டாறு, ரெகுநாதகாவிரி, மலட்டாறு ஆகியவற்றில் மண்டியுள்ள கருவேல மரங்களை அகற்றுவதுடன் அங்கு நடைபெறும் மணல் கொள்ளையினையும் தடுக்க வேண்டும்' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!