வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (14/03/2018)

கடைசி தொடர்பு:03:30 (14/03/2018)

அனுமதி இல்லாமல் நிலத்தை ஆக்கிரமிப்பதாக கெயில் நிறுவனத்தின் மீது புகார்..!

தமிழகம் முழுவதும்  ஹைட்ரோ கார்பன், மீத்தேன், கெயில் எரிவாயு குழாய் பதித்தல், பெட்ரோலிய மண்டலம் என்று பல திட்டங்களுக்கு  எதிராக பல்வேறு கட்சியினரும், விவசாய அமைப்புகளும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

வழுதூரில் தனியார் இடத்தில் கல் ஊன்றியுள்ள கெயில் நிறுவனம்

இந்த நிலையில், ''என்னுடைய நிலத்தில் எனக்கு தகவல் தெரிவிக்காமல் கற்களை ஊன்றி, கெயில் நிறுவனம் ஆக்கிரமித்து வருகிறது. இதுபற்றி விளக்கம் கேட்டால் அலட்சியமாக பதில் சொல்கிறார்கள்'' என்று சென்னையைச் சேர்ந்த ஜாபர்அலி என்பவர் ராமநாதபுரம் காவல்துறையில் கெயில் நிறுவனத்தின் மீது புகார் அளித்துள்ளார்.

கெயில் நிறுவனத்தின் மீது புகார் செய்துள்ள ஜாபர் அலி, ''நான் சென்னையில் தொழில் செய்து வருகிறேன். என்னுடைய சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் ஆகும். என் ஊருக்கு அருகிலுள்ள வாலாந்தரவை ஊராட்சிக்குட்பட்ட வழுதூர் கிராமத்தில் எனக்கு சொந்தமான 3 ஏக்கர் 10 சென்ட் நிலம் உள்ளது. அதற்கு அருகில்தான் வழுதூர் மின் நிலையம் அமைந்துள்ளது. அடிக்கடி ஊருக்கு செல்லும்போது நிலத்தை பார்வையிட்டு வருவேன். சமீபத்தில் வழுதூரில் அமைந்திருக்கும் கெயில் நிறுவனம் என்னுடைய நிலத்தில் கற்களை ஊன்றி வருவதாக அறிந்தேன். என்னுடைய நிலத்துக்குள் அத்து மீறி ஏன் கற்களை ஊன்றினார்கள் என்று தெரியவில்லை. இதுபற்றி நில உரிமையாளரான என்னிடம் எந்த தகவலையும் கூறவில்லை.

 இதுபற்றி கெயில் நிறுவன அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, தாங்கள் எந்த இடத்திலும் கற்கள் ஊன்ற அதிகாரம் உள்ளது என்று அலட்சியமாக பதில் சொல்கிறார்கள். இது எப்படி சரியாகும்? இது சம்பந்தமாக அத்துமீறி கற்கள் ஊன்றிய வழுதூர் கெயில் நிறுவன நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மீண்டும் என்னுடைய நிலத்துக்குள் நுழைவதை தடுக்கவேண்டும் என்றும், ராமநாதபுரம் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளேன். அதன் நகல்களை ராமநாதபுரம் எஸ்.பி, கலெக்டர், டிஜிபிக்கும் அனுப்பியுள்ளேன். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உயர் நீதிமன்றத்தை நாடுவேன்'' என்றார். 

இந்த புகார் குறித்து வழுதூர் கெயில் இந்தியா நிர்வாகியிடம் பேசினோம், ''கெயில் எரிவாயு குழாய்களை 2002 லிருந்து இந்தப் பகுதிகளில் புதைத்துள்ளோம். இதற்கு முறையாக அரசு அனுமதியுடன், அப்போதே நிலத்தின் உரிமையாளர்களுக்கு போதிய இழப்பீடு வழங்கி எரிவாயு குழாய் செல்லும் நிலத்தை பாதுகாத்து வருகிறோம். அந்த பகுதியை யாரும் உபயோகப்படுத்தக்கூடாது. அந்த இடத்தில் தோண்டி விடக்கூடாது என்பதால் அடையாளத்துக்கு கற்களை பதித்துள்ளோம். இது இப்பகுதியிலுள்ள அனைவருக்கு தெரியும். இதை புதிதாக செய்யவில்லை. இதுபற்றி புகார் கூறியுள்ளவருக்கும் தெரியும். அந்த நிலத்தை அவர் வாங்கியுள்ளதால் அப்படி சொல்கிறார். ஏற்கனவே பலமுறை அவருக்கு விளக்கம் சொல்லிவிட்டோம். ஆரம்பத்தில் நாங்கள் நிலத்துக்காரர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படிதான் அனைத்தும் நடக்கிறது. வேறு எந்த அத்துமீறலும் இல்லை' என்றார்.