தலைமை ஆசிரியர்கள் தங்கள் கடமையை உணர்ந்து வேலைசெய்ய வேண்டும்..! கல்வி அலுவலர் அறிவுரை

அனைவருக்கும் கல்வி திட்டத்தின்மூலம் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி, குடுமியான்மலை அரசு உயர்நிலைப் பள்ளியில்  வட்டார கல்வி வள மைய மேற்பார்வையாளர் கோவிந்தராசு தலைமையில் இன்று நடைபெற்றது. 

மாவட்டங்கள் தோறும் அனைவருக்கும் கல்வித் திட்டம் சார்பில், தலைமை ஆசிரியராக இருப்பவர்களுக்கு பயிற்சி அளிக்கும் முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதை, அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரியின் உத்தரவின் பேரில், வட்டார கல்வி வள மையத்தை நிர்வகிக்கும் உதவி கல்வி அலுவலர் நடத்துகிறார். அந்தவகையில், புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் ஒருநாள் பயிற்சி முகாம் இன்று நடந்தது. இதில் தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளி கல்வித் தரத்திலும் மாணவர் சேர்க்கையிலும் தேர்ச்சி விகிதத்திலும் பள்ளிப் பராமரிப்பிலும் அந்தந்த ஊர்மக்களின் உறவு மேம்படுத்துதலிலும் நடைமுறை மற்றும் தளப்பயிற்சிகளை அளித்தனர். தலைமை ஆசியர்களே மாணவ, மாணவிகளாக நடித்து, ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை விவரித்துக் காட்டும் நாடகமும் இந்தப் பயிற்சியில் அரங்கேற்றப்பட்டது.

இப்பயிற்சியைத் தொடங்கிவைத்து, அன்னவாசல் ஒன்றிய உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பொன்னழகு பேசியதாவது, 'அனைவருக்கும் தரமான கல்வி வழங்குவதன்மூலம் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளும் சிறந்து விளங்க வேண்டும் என்பதுதான்  அரசின் நோக்கம். பள்ளிகள் தோறும் செயல்பட்டுவரும் மேலாண்மை குழுக்கள், இதை சிறப்பாகச் செயல்படுத்த நாம் நம்மை அர்ப்பணித்துச் செயல்படவேண்டும். இக்குழுக்கள் இன்னும் சிறப்பாகச் செயல்படும் வகையில் பயிற்சியளிக்கத்தான் இன்று மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் கலந்துகொண்ட நீங்கள் அத்தனை பேரும், எத்தனை பெரிய கடமையைச் சுமந்து நிற்கிறீர்கள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். 

இப்பயிற்சி,  பெருமாநாடு, குடுமியான்மலை,பெரம்பூர், மலைக்குடிபட்டி, இலுப்பூர், கோட்டைமேடு ஆகிய பகுதிகளில் இன்று நடந்தது போல, நாளை மேலூர் காவேரிநகர், மேலமுத்துடையான்பட்டி, பெருஞ்சுனை அண்ணாநகர், காலாடிபட்டி ஆகிய குறுவள மையங்களிலும் நடைபெறும். மேலும், இப்பயிற்சியில் ஒரு பள்ளிக்கு 5 பெற்றோர்கள் வீதம் 960 பெற்றோர்களும் 160 பள்ளியின் தலைமை ஆசிரியர்களும் கலந்துகொள்வார்கள்" என்று கூறினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!