மணல் கடத்திய 3 டிராக்டர்கள் பறிமுதல்! - வளைத்துப்பிடித்த வலையப்பட்டி மக்கள் | Sand Theft - 3 tractors seized

வெளியிடப்பட்ட நேரம்: 07:56 (14/03/2018)

கடைசி தொடர்பு:08:19 (14/03/2018)

மணல் கடத்திய 3 டிராக்டர்கள் பறிமுதல்! - வளைத்துப்பிடித்த வலையப்பட்டி மக்கள்

இலுப்பூர் தாலுகாவில் உள்ள வலையப்பட்டியில், மணல் கடத்திய 3 டிராக்டர்களைப் பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். அவற்றை வருவாய்த்துறை அலுவலர்கள் பறிமுதல்செய்து, அன்னவாசல் போலீஸில் ஒப்படைத்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர்  பகுதியில் உள்ள தெற்கு வெள்ளாறு, பாக்குடி ஆறு ஆகிய காட்டாறுகள் ஓடுகின்றன. இந்த ஆறுகளில், இயற்கையாக மணல் படுகைகள் உருவாகியிருந்தது. இந்தப் பகுதி மணலுக்கு ஏக கிராக்கி இருப்பதால், மணல் கடத்தல் இந்த ஏரியாக்களில் சர்வசாதாரணமாக நடைபெற்றுவந்தன.


பல நூறு ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வந்த கனிம வளங்களில் ஒன்றான இந்த ஆற்று மணல், கடந்த 10 ஆண்டுகளாக பெருமளவில் கொள்ளையடிக்கப்பட்டுவருகிறது. இந்தப் பகுதி மக்கள், மணல் கொள்ளையைத் தடுக்கக் கோரி எத்தனையோ போராட்டங்களை நடத்தியும், அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் எந்தப் பலனும் இல்லை. பிறகு, தாங்களே நேரடியாகக் களத்தில் இறங்கினர். மணலைக் கடத்திச்செல்லும் லாரிகள், டிராக்டர்கள் பற்றித் தகவல் வந்தால், பொதுமக்களே ஒன்றுகூடி, அவற்றை வளைத்துப்பிடித்து வருவாய்த்துறை அலுவலர்கள் வசம் ஒப்படைப்பதை வழக்கமாக்கினர். இந்த மணல் திருட்டினால், தங்கள் கிணறுகளில் தண்ணீர் சுரப்பது பாதிக்கப்பட்டதும், கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டையும் அந்தப் பகுதி மக்கள் சந்திக்கவேண்டியிருந்தது. இதனால்தான் மணல் கடத்தல் வண்டிகளை அவர்கள் அதிரடியாக இறங்கி பிடித்துத்தருவதற்குக் காரணம் என்று வலையப்பட்டி பகுதியினர் கூறுகின்றனர். இவர்களின் இந்த முயற்சிக்கு உதாரணமாக ஒன்றைக் கூறலாம். 


பரம்பூர் ஊராட்சி தெற்கு வெள்ளாறு பகுதியில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20 நாள்களாக இரவும் பகலும் மணல் திருடப்பட்டுவந்தது.  இதில், பல லட்சம் மதிப்புள்ள மணல் திருடப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், 16 டிப்பர் லாரிகளை சிறைபிடித்து தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், சரிக்கட்ட வேண்டியவர்களைக் கவனித்து, மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் நேற்று (13.03.2018), கீழத்தானியம் பகுதி தெற்கு வெள்ளாறில் மணல் திருடிச்சென்ற 3 டிராக்டர்களைப் பொதுமக்கள்   சிறைபிடித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர்கள், பொதுமக்களிடம் மாட்டினால் பிரித்துமேய்ந்துவிடுவார்கள் என்று பயந்து, டிராக்டர்களை மணலுடன் அப்படியே விட்டுவிட்டு  அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதையடுத்து, பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் கிளிக்குடி கிராம வி.ஏ.ஓ திருவருட்செல்வன் அங்கு விரைந்து வந்தார். அந்த மூன்று டிராக்டர்களையும் பறிமுதல்செய்து, அன்னவாசல் போலீஸில் ஒப்படைத்தார். 

இதுகுறித்து அவர் விசாரித்தபோது, கிளிக்குடி கிராமம் விளாம்பட்டியைச் சேர்ந்தவர்களுக்குச்  சொந்தமான டிராக்டர்கள் எனத் தெரியவந்திருக்கிறது. போலீஸார் மேலும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

 


[X] Close

[X] Close