வெளியிடப்பட்ட நேரம்: 08:28 (14/03/2018)

கடைசி தொடர்பு:08:36 (14/03/2018)

கனமழை எதிரொலி! - நெல்லை, தூத்துக்குடி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

கனமழை காரணமாக, நெல்லை மற்றும் தூத்துக்குடி பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை

கன்னியாகுமரி கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலை, காற்றழுத்தத் தாழ்வுமண்டலமாக வலுப்பெற்றுவருகிறது. இதனால் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது.

கன மழை காரணமாக, 5 நாள்களாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மேலும், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன மழையின் காரணமாக இன்று (14.03.2018) தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. 11-ம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு, வழக்கம்போல நடைபெறும். தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் தேர்வுப் பணியில் உள்ள ஆசிரியர்கள், வழக்கம்போல தேர்வு மையங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.