`அனுமதி மறுத்தவுடன் ஒதுங்கிச்செல்ல நான் கோழை அல்ல; பெரியாரின் பேத்தி!’ - கௌசல்யா முழக்கம் | Gowsalya Shankar speech about Periyar

வெளியிடப்பட்ட நேரம்: 08:58 (14/03/2018)

கடைசி தொடர்பு:09:51 (14/03/2018)

`அனுமதி மறுத்தவுடன் ஒதுங்கிச்செல்ல நான் கோழை அல்ல; பெரியாரின் பேத்தி!’ - கௌசல்யா முழக்கம்

ஆணவப் படுகொலைக்கு உடுமலை சங்கர் பலியாக்கப்பட்டு நேற்றுடன் 2 ஆண்டுகள் கடந்துவிட்டன. பட்டப் பகலில் உடுமலை நகரத்தின் மையப் பகுதியில் சங்கரை வெட்டித் தள்ளிய அத்தனை பேருக்கும் நீதித்துறையின்மூலம் தண்டனைபெற்றுக் கொடுத்துவிட்டார் கௌசல்யா.

கெளசல்யா

ஆனால், அவருடைய கடமை அத்துடன் முடிந்துவிடவில்லை. சாதியத்தின் கோர முகத்துக்கு எதிராய் தன் அடுத்தகட்ட நகர்வை முன்னெடுத்திருக்கிறார் கௌசல்யா. சங்கரின் நினைவு நாளான நேற்றைய தினம், அவர் வெட்டி சாய்க்கப்பட்ட அதே உடுமலைப் பேட்டையில், 'சங்கர் சமூக நீதி அறக்கட்டளையை' துவங்கியிருக்கிறார் கௌசல்யா. 

துவக்க விழா நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பல அரசியல் கட்சியின் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். அனைவரையும் வரவேற்றுப் பேசிய கௌசல்யா, சங்கர்குறித்த நினைவலைகளையும், தன் அறக்கட்டளையின் முக்கியத்துவத்தைப் பற்றியும் விரிவாகக் கூறினார். 

அதில், "என் வாழ்வின் மிக முக்கியமான தருணத்தில் இருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் இது சங்கரின் 2-ம் ஆண்டு நினைவேந்தலாக இருக்கலாம். ஆனால், நான் இதை சங்கரின் 2-ம் பிறப்பாகவே பார்க்கிறேன். இதே மண்ணில் சங்கரின் கையை கோத்துக்கொண்டு நிறைய காதலும், கனவுகளுமாகத் திரிந்திருக்கிறேன். அன்று சுமந்திருந்த காதல் இன்றைக்கும் அப்படியே இருக்கிறது. ஆனால், அன்று சுமந்திருந்த கனவு மட்டும் இன்று அடியோடு மாறியிருக்கிறது. அன்று எங்கள் இருவரின் தனிப்பட்ட எதிர்காலம்குறித்த கனவு மட்டுமே  இருந்தது. ஆனால் இன்று, என் தமிழ்ச் சமூகத்தின் ஒட்டுமொத்த விடுதலையும், சமத்துவமும்தான் என்னுடைய கனவாக மாறியிருக்கிறது. அன்று சங்கர் மட்டுமே என் உலகமாக இருந்தான். ஆனால் இன்று, நான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளே என் உலகமாக மாறியிருக்கிறது. சாதி ஒழிக, தமிழ் வெல்க என்ற முழக்கம்தான் இனி என் லட்சியமாக இருக்கப்போகிறது.

கெளசல்யா

சங்கரின் நினைவேந்தலுக்கு பொதுவெளியில் அனுமதி கேட்டால், சட்டம் - ஒழுங்கு பாதிக்கும் என்று கூறி அனுமதி கொடுக்க மறுக்கிறது காவல்துறை. சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கத்தானே நீங்கள் இருக்கிறீர்கள். எங்களுக்குப் பாதுகாப்பு தருவதைவிட வேறு என்ன வேலை உங்களுக்கு இருக்கிறது என்று நான் கேட்கவில்லை. சென்னை உயர் நீதிமன்றம் கேட்டிருக்கிறது. சங்கர் நினைவேந்தல் பேரணிக்காக சுவரொட்டிகள் ஒட்டுவதைக்கூட காவல்துறை தடுத்திருக்கிறது. இதுவரை மற்றவர்கள் நடத்திய நிகழ்ச்சிகளில்தான் கலந்துகொண்டிருக்கிறேன். இதுதான் நான் முன்னின்று நடத்தும் முதல் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்தவுடன் ஒதுங்கிச் செல்வதற்கு நான் ஒன்றும் கோழை அல்ல. பெரியாரின் பேத்தி.

இங்கு கூடியிருக்கும் நமக்குள் கருத்து வேறுபாடுகள் நிறைய இருக்கலாம். ஆனால், இலக்கு வேறுபாடு இருக்காது என்று நம்புகிறேன். சாதி ஒழிப்புக்கு, தமிழும் தமிழர் உரிமைக்கான போராட்டங்களுமே அடிப்படையாக இருக்கிறது. அதேபோன்று, தமிழ்ச் சமூக நீதிக்கு, சாதி ஒழிப்பே அடிப்படையாக இருக்கிறது. இவையே இந்த அறக்கட்டளையின் முழக்கமும்கூட.

சாதி ஒழிப்பும், தமிழ்ச் சமூக விடுதலையும் நேர்க்கோட்டில் நிற்கிற உயிர்க் கொள்கைகளாக மாற வேண்டும் என நினைக்கிறேன். அப்படி இருந்தால்தான், அது சாதி ஒழிப்புக்கும் விடுதலைக்கும் பயன்தரும். அப்படிப்பட்ட கருத்தியலைக்கொண்ட ஒரு புதிய தலைமுறையை உருவாக்க வேண்டும் என்பதே என் நோக்கம். சாதிய ஆணவக் கொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம் கிடைக்க நாம் உழைக்க வேண்டும்'' என்று பேசி முடித்தார்.