வெளியிடப்பட்ட நேரம்: 09:31 (14/03/2018)

கடைசி தொடர்பு:10:02 (14/03/2018)

`டியர் ஹெச்.ராஜா ஷர்மா..!’ - மக்கள் நீதி மய்யத்திலிருந்து வந்த மெயில்

தமிழிசையைத் தொடர்ந்து, மக்கள் நீதி மய்யத்திலிருந்து தனக்கு மெயில் வந்திருப்பதாக ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

ஹெச்.ராஜா


திருப்பூரில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய தமிழிசை, ‘நான் ஒன்று சொன்னால் நீங்கள் ஆச்சர்யப்பட்டு சிரிப்பீர்கள்... மக்கள் நீதி மய்யத்தில் நான் இணைந்துவிட்டதாக எனக்கு இ-மெயில் அனுப்பியிருக்கிறார்கள். அந்த இமெயிலில், ‘நான் நாம் ஆனோம். இன்றிலிருந்து எங்கள் கட்சியில் நீங்கள் உறுப்பினர் ஆனீர்கள். உங்களது உறுப்பினர் எண் இதுதான்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. என் மெயில் ஐடி எப்படி இவர்களுக்குக் கிடைத்தது. உறுப்பினர்களைச் சேர்க்க, கையில் கிடைக்கும் இ-மெயில் ஐடி-க்கு எல்லாம் மெயில் அனுப்புகிறார்’ என்று கமலைக் கலாய்த்து இடைவிடாமல் சிரித்தார் தமிழிசை. 


இதையடுத்து, தங்கள் இணையதளத்தில் செல்போன் எண், இ-மெயில் மற்றும் சட்டமன்றத் தொகுதி உள்ளிட்ட விவரங்களை அளித்து தமிழிசை பதிவு செய்ததற்கான புகைப்பட ஆதாரத்தை மக்கள் நீதி மய்யம் கட்சி ட்விட்டரில் வெளியிட்டது


தற்போது, ஹெச்.ராஜாவும் மக்கள் நீதி மய்யத்திலிருந்து தனக்கு இ-மெயில் வந்திருப்பதாக ட்வீட் செய்து புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். ‘மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர் சேர்க்கும் விதம் இதுதான் போல’ என்றும் குறிப்பிட்டுள்ளார். மக்கள் நீதி மய்யத்திலி ருந்து அவருக்கு வந்துள்ள இ-மெயிலில், ராஜாவின் பெயர் ஹெச்.ராஜா ஷர்மா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஹெச்.ராஜா


'ஆன்லைனில் விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே மெயில்மூலம் கட்சியில் இணைந்ததற்கான தகவல் அனுப்பப்படும்' என்று நேற்று மக்கள் நீதி மய்யம் ஆதரங்களுடன் விளக்கம் கொடுத்த பின்னரும், ஹெச்.ராஜா இவ்வாறு பதிவிட்டிருக்கிறார். ‘மக்கள் நீதி மய்யத்தில் சேர உங்கள் அட்மின் பதிவு செய்திருப்பார்’ என்று நெட்டிசன்கள் கலாய்த்துவருகின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க