வெளியிடப்பட்ட நேரம்: 10:53 (14/03/2018)

கடைசி தொடர்பு:10:53 (14/03/2018)

கொட்டித்தீர்த்த மழையால் குற்றால அருவிகளில் குளிக்கத் தடை!

நெல்லை மாவட்டத்தில், இரவு முழுவதும் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக, குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்  டிருப்பதால், குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

குற்றாலம் மெயின் அருவி

வங்கக் கடலின் தென்மேற்கில் மையம்கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக, நெல்லை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கன மழை பெய்துவருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் மழையால், குற்றால அருவிகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. 

கடந்த சில வாரங்களாகக் கடும் வெயில் சுட்டெரித்த நிலையில், வனப்பகுதிகளில் உள்ள காய்ந்த மரங்களின் கிளைகள் நீர் வரத்துப் பகுதியில் விழுந்து கிடக்கக்கூடும் என்பதால், தற்போது ஆர்ப்பரித்து வரக்கூடிய புதுவெள்ளத்தில் அவை அடித்து வரப்படும் ஆபத்து அதிகமாக உள்ளது. அதன் காரணமாக, அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பழைய குற்றால அருவியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடி, அருவிக்குச் செல்லும் படிக்கட்டுகளில் வெள்ளமாகப் பாய்கிறது. அதனால், அங்கும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

மலைப்பகுதியில் பெய்யும் மழையின் காரணமாக, அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கிறது. அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துவருவதால், மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் படுபாதாளத்துக்குச் சென்றதால், குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து இருந்தது. ஆனால், இரு தினங்களாகப் பெய்த மழையால், அணைகளின் நீர்மட்டம் உயரத் தொடங்கியிருப்பது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

பாபநாசம் பகுதியில் நேற்று (13-03-2018) 19 செ.மீ மழை பெய்தது. அதனால், பாபநாசம் அணைக்கு 2,642 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதன் காரணமாக, அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து, 32 அடியாகி இருக்கிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 20 அடி அதிகரித்து, 49 அடியை எட்டியது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 83.53 அடியாக உள்ளது. 

நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக, பாபநாசத்தில் 19 செ.மீ மழை பதிவானது. ராமா நதி பகுதியில் 13 செ.மீ மழையும் செங்கோட்டை, சேர்வலாறு, குண்டாறு ஆகிய இடங்களில் 10 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. நெல்லை மாவட்டம் முழுவதும் நேற்று பதிவான மழையின் சராசரி அளவு 80.50 செ.மீ என மாவட்ட தகவல் மையம் அறிவித்துள்ளது. தொடர்ந்து பெய்யும் மழையின் காரணமாக, நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.