நாகர்கோவில் ரயில் நிலையத்தில் தடம் புரண்ட ரயில் இன்ஜின்!

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து கோவைக்குச் செல்லும் பயணிகள் ரயிலுக்கான இன்ஜின் பொருத்தும் பணி நடைபெற்ற போது தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

தடம் புரண்ட ரயில் இஞ்ஜின்

நாகர்கோவில் சந்திப்பு ரயில்நிலையத்திலிருந்து, தினமும் காலை 7.15 மணிக்கு நெல்லை, விருதுநகர், மதுரை வழியாக கோவைக்குச் செல்லும் பயணிகள் ரயில் புறப்பட்டுச் செல்லும். அந்த ரயிலின் பெட்டிகள் 2-வது பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றை முதலாவது பிளாட்பாரத்துக்கு மாற்றும் முயற்சி நடந்தது. அதற்காக, அந்த ரயில் பெட்டிகளில் இன்ஜின் இணைக்கும் பணி நடைபெற்றது.

ரயில் இன்ஜின் கொண்டுவரப்பட்டபோது, திடீரென தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கியது. தடம் புரண்ட ரயில் இன்ஜின், உடனடியாக நிறுத்தப்பட்டது. டிரைவரின் சாதுர்யத்தால் அங்கு கவிழ்ந்து விழாமல் அப்படியே நின்றுவிட்டது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும், அந்த தண்டவாளத்தில் ரயில்களை இயக்க முடியாததால், மாற்றுப் பாதைகள் மூலமாக ரயில்கள் இயக்கப்பட்டன. ஆனால், நாகர்கோவிலிலிருந்து கோவைக்குச் செல்லவேண்டிய பயணிகள் ரயில், உரிய நேரத்தில் இயக்கப்படாததால் பயணிகள் பாதிப்புக்குள்ளானார்கள்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அதிகாரிகள், தண்டவாளத்தில் இருந்து இறங்கிய ரயில் இன்ஜினைத் தூக்கி, சரிசெய்யும் பணிகளை முழுவீச்சில் முடுக்கிவிட்டனர். இதற்காக, திருவனந்தபுரத்திலிருந்து மீட்பு வாகனம் வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த வாகனம் வந்த சில நிமிட நேரத்தில், ரயில் இன்ஜின் தண்டவாளத்தில் நிலை நிறுத்தப்பட்டுவிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!