வெளியிடப்பட்ட நேரம்: 11:29 (14/03/2018)

கடைசி தொடர்பு:11:42 (14/03/2018)

லவ் டார்ச்சர் ; ஹால் டிக்கெட் கிழிப்பு! - கிருஷ்ணகிரி மாணவிக்கு நேர்ந்த துயரம்

பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை எழுதிக்கொண்டிருக்கும் மாணவி தமிழரசியின் ஹால் டிக்கெட்டை, சக மாணவர்கள் இரண்டுபேர் கிழித்து எறிந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தச் சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரி போலீஸ் தரப்பில் விசாரித்தபோது, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்துள்ள தேவிரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர், சங்கர். இவரது மகள் தமிழரசி. இவர், அகரம் அரசு உயர் நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவந்தார். தற்போது பொதுத்தேர்வு எழுதிவந்தார். தமிழரசிக்கும் அதே பள்ளியில் ப்ளஸ் டூ படிக்கும்  ஆவத்வாடி கிராமத்தைச் சேர்ந்த ஒரு மாணவனும்  காதலித்துவந்துள்ளனர். 

இருவரும், இரு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், தமிழரசியைக் காதலித்துவந்த மாணவனின் நண்பர்களான அதே பள்ளியில் ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்கள் பசுபதி, சந்தனபாண்டியன் இருவரில், பசுபதியைக் காதலிக்கும்படி டார்ச்சர் செய்துள்ளனர். 12-ம் தேதி, தமிழரசி தேர்வு எழுதிவிட்டு வந்தபோது மீண்டும் மிரட்டியுள்ளனர். ஒரு கட்டத்தில், 'நீ பசுபதியைக் காதலிக்கவில்லை என்றால், உன் முகத்தில் ஆசிட் ஊற்றுவோம். நீ ஏற்கெனவே இன்னொரு மாணவனுடன் பழகிவரும் செய்தியை ஊரெங்கும் பரப்பிவிடுவோம்' என்று மிரட்டி, தமிழரசியின் கையில் இருந்த பேப்பர்களைக் கிழித்து எறிந்துள்ளனர். அதில் ஹால் டிக்கெட்டும் சேர்ந்து கிழிந்தது. இதனால், பதற்றம் அடைந்த தமிழரசி, வீட்டுக்குச் சென்றதும் அவரது தந்தை சங்கரிடம் அழுதுள்ளார். 

தமிழரசியின் தந்தை இதுகுறித்து ஆசிரியர்களிடம் பேசியுள்ளார். ஆசிரியர்கள் ஹால் டிக்கெட் பற்றி கவலை வேண்டாம். ஹால் டிக்கெட் இல்லாமல் தேர்வு எழுத அனுமதிக்கிறோம்' என சமாதானம் கூறி அனுப்பிவைத்துள்ளனர். 

இந்த நிலையில் பசுபதி, சந்தானபாண்டியன் இருவரும் சேர்ந்து, 'தமிழரசி அதே பள்ளியில் படிக்கும் இன்னொரு மாணவனை காதலித்து வருகிறார்' என்ற செய்தியை சக மாணவர்கள் மூலமாக பரப்பியுள்ளனர். தகவல் அறிந்த தமிழரசி, மனவேதனையால் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைசெய்துகொண்டார். இந்தச் சம்பவம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.