வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (14/03/2018)

கடைசி தொடர்பு:12:00 (14/03/2018)

'எங்கள் மாநில இளைஞர்களுக்கு வேலை தரும் தொழிற்சாலைகளுக்கே அனுமதி’- புதுச்சேரி அமைச்சர் அதிரடி அறிவிப்பு

“புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலை தரும் தொழிற்சாலைகளுக்கே அனுமதி அளிக்கப்படும்'' என்று தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி

புதுச்சேரி அரசின் தொழிலாளர் துறை சார்பில், ஐ.டி.ஐ நிறுவனங்களுக்கு ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழ் வழங்கும் விழா வம்பாக்கீரப்பாளையத்தில் உள்ள மகளிர் ஐ.டி.ஐ வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, “குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என்பதை தேர்தல் வாக்குறுதியாக அளித்து, தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை அமைத்தோம். ஆனால், ஆட்சி அமைந்த பிறகு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறோம். அரசு மற்றும் அரசின் சார்பு நிறுவனங்களில் பணிபுரியும்  ஊழியர்களுக்கு, ஒன்றரை ஆண்டுகளாக ஊதியமே வழங்க முடியாத நிலை நிலவி வருகிறது. அதனால்தான், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை. இது மட்டுமல்லாமல், மாநில அரசு பல சோதனைகளைச் சந்தித்துள்ளது. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, மத்திய அரசு நிதி தராதது, 7-வது சம்பள கமிஷன் அமல், பத்திரப்பதிவுக்குத் தடை, கலால் துறையில் சுப்ரீம் கோர்ட்டு தடை போன்றவற்றால் மாநில அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கந்தசாமி

குறிப்பாக, ஜி.எஸ்.டி வரி விதிப்பால் மாதம் ஒன்றுக்கு 40 கோடி ரூபாய் என ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் வரை வருவாயை இழந்துள்ளோம். இதற்கிடையில், 7-வது சம்பளக் கமிஷனை அமல்படுத்த 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அரசு சந்தித்துவரும் நிதி நெருக்கடிகளை புதுச்சேரி மக்கள் நன்கு அறிவீர்கள். எனவே, நம் புதுச்சேரி இளைஞர்கள் தொழில் தொடங்கி ஒவ்வொருவரும், குறைந்தபட்சம் 10 பேருக்கு வேலை வாய்ப்பை வழங்க முன்வர வேண்டும். தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளைத் தொடங்க புதுச்சேரி அரசு அழைப்பு விடுத்துள்ளது. தனியார் தொழிற்சாலைகளுக்கு பிப்டிக் மூலம் பல சலுகைகளை வழங்குகிறோம். வரும் காலங்களில், உள்ளூர் இளைஞர்களுக்கு 60 சதவிகிதம்  வரை வேலைவாய்ப்புகளைத் தரும் தொழிற்சாலைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்க இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க