மோடிக்காகத் தயாரான வாழைப் பட்டுநூல் கோட்டு! - அசத்திய தூத்துக்குடி இளம் விஞ்ஞானி

வாழைநார் பட்டுநூல் மூலம் தயார்செய்த கோட்டை, வரும் மார்ச் 16-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள விழாவில், தூத்துக்குடியைச் சேர்ந்த இளம்விஞ்ஞானி முருகன், பிரதமர் மோடியிடம் வழங்குகிறார்.

இளம்விஞ்ஞானி முருகன்

தூத்துக்குடியைச் சேர்ந்தவர், முருகன். இளம் விஞ்ஞானியான  இவர், கடந்த 2002-ம் ஆண்டு, வாழைத்தண்டு மடலிலிருந்து பட்டுநூல் பிரித்தெடுக்கும் இயந்திரத்தைக்  கண்டுபிடித்தார். இந்த இயந்திரத்துக்கு, கடந்த 2006-ம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டி அங்கீகாரம் அளித்தது. இந்த இயந்திரத்துக்கு, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பாராட்டு தெரிவித்தார். கடந்த 2017-ம் ஆண்டு, இந்த இயந்திரத்துக்கான காப்புரிமையும் வழங்கப்பட்டது.  இந்த இயந்திரத்தின்மூலம் வாழைத்தண்டு மடலிலிருந்து கிடைக்கும் பட்டுநூல் மூலம் உடைகள் தயாரிக்க முடியும் என்பதையும் அவர் அறிமுகப்படுத்தினார். வாழைப் பட்டுநூல்மூலம் கோட்டு ஒன்றைத் தயார் செய்துள்ள முருகன், அதை பிரதமர் மோடிக்கு வழங்க உள்ளார்.

பட்டுநூல் கோட்டு

 டெல்லியில், மார்ச் 16-ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறும் ’கிஸான் உன்னதி மேளா’ விழாவில், பிரதமர் நரேந்திர மோடி மேளாவைத் திறந்துவைக்கிறார். அதில்,  தான் தயாரித்த கோட்டை பிரதமரிடம் வழங்க அனுமதிபெற்றுள்ளார் முருகன். இதற்கான அழைப்புக் கடிதமும் இவருக்கு வந்துள்ளது.

இதுகுறித்து முருகனிடம் பேசினோம், “ வாழை மரங்களில் குலையை வெட்டிய பிறகு, விவசாயக் கழிவாக மாறும் வாழை மடலிலி  ருந்து பட்டு நூலிழைகள் பிரிக்கப்பட்டு, அதன்மூலம் சட்டை மேல் அணியும் கோட்டு ஒன்றைத்  தயாரித்துள்ளேன்.  அந்த கோட் உடையை  பிரதமர் மோடியிடம் டெல்லியில் நடைபெற உள்ள விழாவில் வழங்க இருக்கிறேன். வாழைப்பட்டு நூல் உடை அணிவதால் உடலின் வெப்பநிலை சீராகும். நோய் எதிர்ப்புர்த் திறனும் அதிகரிக்கும்.  மேலும், அங்கு நடைபெறும் கண்காட்சியில், வாழைப் பட்டுநூல் பிரித்தெடுக்கும் முறைகுறித்தும் செயல்விளக்கம் அளிக்க இருக்கிறேன். 19-ம் தேதி, குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து, கோட்டு தயாரிப்பு மட்டுமல்லாமல், பெண்களுக்கான எனது சானிட்டரி நாப்கின் தயாரிப்புகுறித்தும் விளக்கம் அளிக்க இருக்கிறேன்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!