உடல் உறுப்பை தானம் தந்து 7 பேரை வாழவைத்த கூலித்தொழிலாளியின் மனைவி! | Wage worker’s wife donated her Organs and saved 7 people life

வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (14/03/2018)

கடைசி தொடர்பு:12:40 (14/03/2018)

உடல் உறுப்பை தானம் தந்து 7 பேரை வாழவைத்த கூலித்தொழிலாளியின் மனைவி!

விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள்  7 பேருக்கு வாழ்வளித்துள்ளதால் அவரின் குடும்பத்தார் நெகிழ்ச்சியில் உறைந்து கிடக்கிறார்கள்.

கூலித்தொழிலாளியின் மனைவி ஜானகி

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ளது மலைக்குடிப்பட்டி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான குருநாதனுக்கு, மனைவி ஜானகி மற்றும் ஆர்த்திகா, நந்தினி, பவானி, நாகம்மாள் என நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 6-ம் தேதி இலுப்பூருக்குச் சென்ற குருநாதனின் மனைவி ஜானகி,  அந்த வழியே வந்த பைக்கில் லிஃப்ட் கேட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது  எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று ஜானகியின் மீது  மோதியதில் ஜானகி படுகாயம் அடைந்தார். ரத்தவெள்ளத்தில் கிடந்த ஜானகி, உடனடியாக இலுப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.  பின்னர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கும், அடுத்து மேல்சிகிச்சைக்காக திருச்சி தில்லைநகரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அனுமதித்தனர். சிகிச்சை பெற்றுவந்த ஜானகி, மூளைச்சாவு அடைந்தார். இதனைத்தொடர்ந்து ஜானகியின் உடல் உறுப்புகளை தானம் வழங்கினால் பலருக்கு வாழ்வு கிடைக்கும் என அவரது குடும்பத்தாரிடம் மருத்துவர்கள் விளக்கினர். இதையடுத்து ஜானகியின் கணவர் குருநாதன், தனது மனைவியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில் நேற்று அறுவைசிகிச்சை மூலம் ஜானகியின் உடல் உறுப்புகள் அகற்றப்பட்டன. இதயம் பாதுகாக்கப்பட்ட பெட்டியில் வைத்து உடனடியாக மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மற்றும் ஏர்-இந்தியா விமானம் மூலம் சென்னை போர்ட்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, ஒரு நோயாளிக்கு பொருத்தப்பட்டது. இதேபோல் நுரையீரல், சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும்  கண்கள்  உள்ளிட்ட உடல் உறுப்புகள் திருச்சி அரசு மருத்துவமனை, திருச்சி அப்போலோ, காவேரி மருத்துவமனை,  சிதார் உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளுக்குத் தானமாக வழங்கப்பட்டன. தற்போது ஜானகியின் உடல் உறுப்பு  தானத்தின் மூலம் 7 பேர் வாழ்வு பெற்று உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து ஜானகியின் கணவர் குருநாதன், “என் மனைவி ஜானகியின் உடல் உறுப்புகளை தானம் கொடுத்ததில், 7 பேருக்கு வாழ்வு கிடைத்துள்ளதாகக் கூறுகிறார்கள். அந்த 7 பேரின் மூலம் என் ஜானகி மீண்டும் உயிர் வாழ்கிறார். அதுபோது எங்களுக்கு” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க