வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (14/03/2018)

கடைசி தொடர்பு:14:03 (14/03/2018)

மன்னார் வளைகுடா பகுதி போர்க்கப்பல் பயணிக்கப் பயன்படுமா? ஆய்வில் இறங்கியது இந்திய கடற்படை

மன்னார் வளைகுடா கடல் பகுதியைப் போர்க்கப்பல்கள் பயன்படுத்துவதுகுறித்த ஆய்வை இந்திய கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார் வளைகுடா கடலில் ஆய்வு மேற்கொள்ளும் இந்திய கடற்படை வீரர்.

இலங்கையில் உள்ள துறைமுகங்களை மேம்படுத்துவதாக அந்நாட்டுடன் ஒப்பந்தங்கள் போட்டு, ஹம்பன் தோட்டா துறைமுகத்தை விரிவுபடுத்திவருகிறது சீனா. மேம்படுத்துதல் என்ற பெயரில் பணிகள் நடந்தாலும், பிற்காலத்தில் சீனா இந்தத் துறைமுகத்தைத் தனது போர் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு நடந்தால், அது இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கக்கூடும். இதைத் தவிர்க்க, இலங்கை கடலோரப் பகுதிகளைத் தங்கள் கண்காணிப்பில் வைத்திருக்க இந்திய பாதுகாப்புத்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இந்திய கடற்படையினர் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இதற்கென கொச்சியில் உள்ள இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். சட்லஜ் எனும் ஆய்வுக் கப்பல், கடந்த சில நாள்களாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்தக் கப்பலின் கேப்டன் திருபுவன்சிங் தலைமையில், கடற்படையைச் சேர்ந்த தொழில்நுட்பப் பிரிவினர், பாம்பன் - கீழக்கரை இடையேயான நிலப்பரப்பு மற்றும் கடல்வழி ஆகியனகுறித்து ஆய்வு நடத்திவருகின்றனர்.  சட்லஜ் கப்பல் வீரர்கள், அனைத்து தொழில்நுட்ப வசதிகளுடன்கூடிய 3 சிறு படகுகளில் மன்னார் வளைகுடா பகுதிக்குச் சென்று, இப்பகுதியில் நிலவும் பருவநிலை மாற்றங்கள், நீர்மட்டம், காற்றின் வேகம், கடலில் கிடக்கும் பாறைகள், கடலின் ஆழம் ஆகியன குறித்தும், தேவை ஏற்படின் இந்தப் பகுதியில் போர்க்கப்பல்கள் வந்து செல்ல உள்ள சாத்தியக் கூறுகள்குறித்தும் செயற்கைக்கோள் துணையுடன் ஆய்வுசெய்து வருகின்றனர்.