வெளியிடப்பட்ட நேரம்: 13:01 (14/03/2018)

கடைசி தொடர்பு:13:01 (14/03/2018)

கார் ஓட்டிப் பழகியபோது மாணவியின் உயிரைப் பறித்த புதுமணத் தம்பதி 

கார் விபத்தில் சிக்கிய பவித்ரா

சென்னையில் கார் ஓட்டிப் பழகியபோது, பள்ளி மாணவி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை சூளைமேடு, வன்னியர் 2-வது தெருவைச் சேர்ந்தவர், துரைவேலன். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களது மகள் பவித்ரா. 7 வயதாகும் இவர், அந்தப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்துவருகிறார். நேற்றிரவு 9 மணியளவில், வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அந்தப் பகுதியைச் சேர்ந்த டேனி  என்பவர், சென்னை ஒரகடத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைபார்க்கிறார். இவருக்கும் ப்ரீத்தி என்பவருக்கும் சமீபத்தில்தான் திருமணம் நடந்துள்ளது.

 இந்த நிலையில் ப்ரீத்தியும் அவரது கணவர் டேனியும் அந்தப் பகுதியில் நேற்றிரவு காரில் சென்றுள்ளனர். காரை பரீத்தி ஓட்டியுள்ளார். அப்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இன்னொரு காரில் மோதியது. இதனால், நிறுத்தப்பட்டிருந்த கார்  நகர்ந்து, அதன் அருகே விளையாடிக்கொண்டிருந்த பவித்ரா மீது மோதியது. இதில் அவர் உடல் நசுங்கினார். படுகாயமடைந்த பவித்ராவை மருத்துவமனைக்குக் கொண்டுச்சென்றனர். ஆனால், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

 இதுகுறித்து அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். காரை தாறுமாறாக ஓட்டிய ப்ரீத்தி மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய ப்ரீத்தி, டிரைவிங் லைசென்ஸ் வைத்துள்ளார். இதனால், அவர்மீது அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டுதல், உயிர்ச்சேதம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில், போலீஸார் ப்ரீத்தியைக் கைதுசெய்தனர். 
 போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "ப்ரீத்திக்கு, கார் ஓட்ட டேனி கற்றுக்கொடுத்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. . இதனால் ப்ரீத்தி டேனி மற்றும்  விபத்தை நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை நடந்துவருகிறது. தாறுமாறாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ப்ரீத்தி மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம்" என்றனர்

மாணவியின் மரணம், சூளைமேடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.