வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (14/03/2018)

கடைசி தொடர்பு:14:05 (14/03/2018)

அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நாளை நடைபெறும்! - கட்சி மேலிடம் அறிவிப்பு

அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டம், நாளை மாலை 5 மணி அளவில் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடைபெறும் எனக் கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. 

அ.தி.மு.க

சென்னை  ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில், நாளை மாலை 5 மணிக்கு எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதேபோல தி.மு.க-வின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டமும் நாளை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. 

நாளை நடைபெறும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டம், தமிழக அரசியல் சூழலை விவாதிக்கும் விதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், டி.டி.வி.தினகரன் தனது புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடியை நாளை மாலை அறிவிக்க உள்ளார்.  தினகரன் அணியில் 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு அளித்துள்ள நிலையில், மேலும் சில எம்.எல்.ஏ-க்கள் டி.டி.வி.தினகரன் பக்கம் செல்லாமல் இருப்பது தொடர்பான விவாதம் நடைபெறும். டி.டி.வி.தினகரன் பக்கம் எம்.எல்.ஏ-க்கள் செல்லாமல் இருக்க, பல்வேறு நடவடிக்கைகளை அ.தி.மு.க தலைமை எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரில், ஒவ்வொரு எம்.எல்.ஏ-வின் செயல்பாடும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதுகுறித்தும் விவாதிக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.