'காட்டுத் தீ வரும்; ஆனால், யாரும் சாக மாட்டார்கள்!' - குரங்கணி பழங்குடியின மக்கள் வேதனை

குரங்கணி

உலகம் முழுவதும் மலை ஏறி பயிற்சி பெற்ற வழிகாட்டியாக இருந்தாலும், உள்ளூர் மலைவாழ் மக்களின் வழிகாட்டுதல் இல்லாமல் மலைப்பகுதிக்குள் செல்வது தவறு என்பதை உணர்த்திய நிகழ்வாக அமைந்துவிட்டது, குரங்கணி தீ விபத்து. இரண்டு நாள்கள் கடந்துவிட்டன. இயல்பு நிலை திரும்ப கொஞ்சம் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறது குரங்கணி கிராமம். மலைகள் சூழ்ந்த மலை கிராமமான குரங்கணி கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளும் முன்னூறுக்கும் மேற்பட்ட மக்களும் வசிக்கிறார்கள். இவர்களின் பிரதான பணி மலைப்பகுதிகளில் உள்ள மிளகு, காபி, லவங்கம் தோட்டங்களில் தினக்கூலிகளாக வேலை செய்வதுதான். இவர்களில் சிலர் தொழில் முறை மலை ஏற்ற வழிகாட்டிகளாகவும் இருக்கிறார்கள்.

’’கடந்தவாரம்கூட மலையில் தீ பிடித்தது. இந்த மாதிரியான சமயங்களில் நாங்கள் யாரும் மலைக்குச் செல்ல மாட்டோம். எங்கே புல் இருக்கிறது எங்கே மரங்கள் இருக்கின்றன என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும். இன்னும் எவ்வளவு நேரம் தீ எரியும் என்றுகூட எங்களால் கணிக்க முடியும். தீ எரிந்தால் அடுத்தநாள் மழை வரும். தீ அணைந்துவிடும். ஆனால்,கடந்த வாரமும் வரவில்லை, நேற்று முன் தினமும் மழை வரவில்லை. ஒருநாள் தாண்டித்தான் மழை வந்தது. வெயில் காலத்தில் காட்டுத்தீ வரும்; ஆனா யாரும் சாக மாட்டாங்க. ஆனால், இப்போதுதான் இந்த மாதிரியான சம்பவம் நடந்திருக்கிறது. இந்தச் சம்பவம் எங்களை ரொம்ப பாதித்திருக்கிறது. யார் பெற்ற பிள்ளைகளோ தெரியவில்லை. எங்கள் மலையில் உயிரை விட்டுவிட்டார்கள்’’ என்றனர் வேதனையோடு குரங்கணி வாழ் மக்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!