எம்.ஜி.ஆர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம்!  - பொதுச் செயலாளர் சசிகலா; துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் #VikatanExclusive

டி.டி.வி.தினகரன்

னிக்கட்சியின் பெயரையும் கொடியையும் நாளை அறிவிக்க இருக்கிறார் டி.டி.வி.தினகரன். ' எம்.ஜி.ஆர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சியை அறிவிக்க இருக்கிறார் தினகரன். பொதுச் செயலாளராக சசிகலாவும் துணைப் பொதுச் செயலாளராக தினகரனும் பொறுப்பேற்க உள்ளனர். கட்சிக் கொடியில் அண்ணாவுக்குப் பதில் அம்மா படம் இடம் பெற்றிருக்கிறது' என்கின்றனர் தினகரன் ஆதரவாளர்கள். 

தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கியும் அவர் பரிந்துரைத்த மூன்று கட்சிப் பெயர்களில் ஒன்றை ஒதுக்குமாறும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது டெல்லி உயர் நீதிமன்றம். ' இது எங்களுடைய சட்டப் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி' எனக் கூறி பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர் தினகரன் ஆதரவாளர்கள். ' உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, தேர்தல் ஆணையம் மேல்முறையீட்டுக்குச் செல்லலாம்' என்ற எண்ணத்தில், தனிக்கட்சிக்கான தேதியை உடனடியாக அறிவித்தார் தினகரன். இதன்படி, நாளை மதுரை மேலூர் பொதுக் கூட்டத்தில் தனிக்கட்சி பெயரை அறிவிக்க இருக்கிறார். " வழக்கமாக, தினகரன் கூட்டத்துக்கான செலவுகளை மேலூர் முன்னாள் எம்.எல்.ஏ சாமிதான் செய்து வந்தார். இந்த முறை, தனிக்கட்சி கூட்டத்துக்கான செலவுகளை முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜியும் பழனியப்பனும் செய்து வருகின்றனர். கூட்டத்துக்கான மொத்த செலவு ஐம்பது லட்சத்தைத் தாண்டிவிட்டது. ஐந்தாயிரம் பேர் அமரும் வகையில் பந்தல் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன" என விவரித்த தினகரன் ஆதரவாளர் ஒருவர், 

" அ.தி.மு.க அம்மா என்ற பெயரில் தினகரன் கட்சி தொடங்கலாம்; அப்படித் தொடங்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என ஆட்சியில் உள்ளவர்கள் பேசி வந்தனர். ' நான் எப்போது அ.தி.மு.க அம்மா என்ற பெயரைக் கேட்டேன்?' எனக் கொதித்தார் தினகரன். புதிய கட்சிக்கு ஏற்கெனவே பரிந்துரைத்த பெயர்களில் ஒன்றான, எம்.ஜி.ஆர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரையே இறுதி செய்து வைத்திருக்கிறார். புதிய கட்சியில் தன்னை முன்னிலைப்படுத்தியே அனைத்துப் பணிகளையும் செய்து வந்தார். அவரது முயற்சிக்கு சசிகலா எந்தவித ஆதரவையும் கொடுக்கவில்லை. ' உள்ளாட்சித் தேர்தலில் யூனிஃபார்ம் சின்னம் பெறுவதற்கும் நம்மை நம்பி வந்தவர்களுக்குப் பதவி கொடுக்கவும் தனிக்கட்சி அவசியம்' என்பதை வலியுறுத்தினார் தினகரன்.

ஒருகட்டத்தில், அவரது முயற்சியை சசிகலாவும் ஏற்றுக்கொண்டார். இதன்பிறகுதான் வில்லங்கமே தொடங்கியது. தங்க.தமிழ்ச்செல்வன்சசிகலா உள்பட சில நிர்வாகிகள், சசிகலா மீது மிகுந்த அன்பு வைத்திருப்பவர்கள். அவர்கள் தினகரனிடம், ' தனிக்கட்சியில் சசிகலாவுக்கு என்ன பதவி?' எனக் கேட்டனர். ' அவர் சிறையில் இருப்பதால் அவரால் கட்சிப் பணியில் செயல்பட முடியாது. அவர் சிறையில் இருந்து வந்ததும் பொதுச் செயலாளர் பதவியைக் கொடுத்துவிடுவேன்' எனக் கூறியிருக்கிறார் தினகரன். இந்தச் சமாதானத்தை தங்க.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டவர்கள் ஏற்கவில்லை. வேறுவழியில்லாமல், சசிகலா பெயரை பொதுச் செயலாளராக முன்னிறுத்துகிறார் தினகரன். ஆனால், கட்சியின் அதிகாரங்கள் அனைத்தும் அவரிடமே இருக்கும் வகையில் சட்டதிட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன" என்றவர், 

" மேலூரில் உள்ள தனியார் இடத்தில்தான் கூட்டத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார் தினகரன். கூட்டத்தில் பங்கேற்க வருகிறவர்கள், இரண்டு நாள்களுக்கு முன்னரே பக்கத்து ஊர்களில் வந்து தங்கிவிட்டனர். அவர்களுக்கான உணவு ஏற்பாடுகளை மேலூர் சாமி கவனித்து வருகிறார். மழை வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், அனைவரும் அமரும் வகையில் பந்தல் போடப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியோடு முரண்பட்ட நேரத்தில், மாவட்டவாரியாக புதிய நிர்வாகிகளை அறிவித்தார் தினகரன். இப்போது அந்தப் பதவிகளையெல்லாம் நீக்கிவிட்டு, புதிதாக நிர்வாகிகளை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். தகுதிநீக்கத்துக்கு ஆளான 18 எம்.எல்.ஏக்களுக்கும் பதவி கொடுப்பாரா என்பதும் கேள்விக்குறிதான். அவர்களுக்குப் பதவி கொடுத்துவிட்டால், கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். ' தினகரனின் தனிக்கட்சியில் சேர மாட்டோம்' என முன்னரே அறிவித்துவிட்டார் தங்க.தமிழ்ச்செல்வன். உள்ளாட்சியில் பெருவாரியான வெற்றிகளை ஈட்ட வேண்டும் என்பதுதான் நிர்வாகிகளின் எண்ணம். அப்படி வெற்றிபெற்றுவிட்டால், ' நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க' என நீதிமன்றத்தில் தெரிவிக்க முடியும். அதன்படி, இரட்டை இலையும் எங்கள் கைக்கு வந்து சேர்ந்துவிடும்" என்றார். 

ஆனால், இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், " தனிக்கட்சியைத் தொடங்கிவிட்டால், அ.தி.மு.க மீது எந்தக் காலத்திலும் தினகரனால் உரிமை கொண்டாட முடியாது. இந்த உண்மை தெரிந்திருந்தும் தொண்டர்களை வளைப்பதற்காக இவ்வாறெல்லாம் பேசுகின்றனர். 'குக்கர் சின்னத்தை வேறு யாரும் கேட்டுவிடக் கூடாது' என்ற அச்சத்தில்தான், நீதிமன்றம் மூலம் நிவாரணம் தேடினார். ' முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பில் 18 எம்.எல்.ஏக்களும் வாக்களித்திருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்' என சிலர் பேசுகின்றனர். ' முதல்வருக்கு எதிராகச் செயல்பட்டாலே அவர்களது பதவிகளைப் பறிக்க முடியும்' என்பதற்கு முன்னுதாரணமாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு இருக்கிறது. அப்படிப் பார்த்தால், 18 எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்க வழக்கில் எங்களுக்கு ஆதரவாகத்தான் தீர்ப்பு வரும். இந்தக் கருத்தில் நீதியரசர்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டதால்தான், தீர்ப்பு வெளியாவதில் தாமதம் ஏற்படுகிறது. தீர்ப்பு வந்தாலும் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எந்தவிதச் சிக்கலும் ஏற்படப் போவதில்லை. தனிக்கட்சியை வளர்க்கும் வேலையைத்தான் தினகரனால் செய்ய முடியும். அ.தி.மு.கவுக்குள் அவரால் எந்தக் காலத்திலும் ஆதிக்கம் செலுத்த முடியாது" என்றார் உறுதியாக. 

அதேநேரம், தனிக்கட்சி அறிவிப்பால் ஏற்படப் போகும் விளைவுளைப் பற்றியும் ஆளுங்கட்சி வட்டாரத்தில் தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. ' ஆட்சியில் இருந்துகொண்டே, தினகரனுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள் யார்?' என்ற பட்டியலையும் தயாரித்து வருகின்றனர் அமைச்சர்கள். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!