கர்ப்பிணி உஷா உயிரிழந்த விவகாரம்… பாதிக்கப்பட்டவர்களை  நோகடிக்கும் காவல்துறை! | Police perform their normal duty in Usha murder case

வெளியிடப்பட்ட நேரம்: 13:51 (14/03/2018)

கடைசி தொடர்பு:16:51 (14/03/2018)

கர்ப்பிணி உஷா உயிரிழந்த விவகாரம்… பாதிக்கப்பட்டவர்களை  நோகடிக்கும் காவல்துறை!

போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் எட்டி உதைத்ததால் பலியான உஷா வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராகப் போலீஸார் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உஷாதஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த சூலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த  ராஜா. தன் மனைவி உஷாவுடன் கடந்த 7-ம் தேதி  மாலை தஞ்சாவூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி  வந்துகொண்டிருந்தார். அப்போது துவாக்குடி டோல்பிளாசா அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான போலீஸார் ராஜா வந்த வாகனத்தை மறித்தனர். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சென்ற ராஜாவை இன்ஸ்பெக்டர் காமராஜ் ஸ்கூட்டரில் விரட்டிச் சென்று, திருவெறும்பூர் பெல் கணேசா ரவுண்டானா அருகே, எட்டி உதைத்ததாகக் கூறப்படும் நிலையில் பைக்கின் பின்புறம் உட்கார்ந்து இருந்த ராஜாவின் மனைவி உஷாவும், ராஜாவும் கீழே விழுந்தனர். இதில் உஷா சம்பவ இடத்திலேயே பலியானார்.

 

இந்தச் சம்பவத்தில் பலியான உஷா, கர்ப்பிணி எனக் கூறப்பட்டது. இதனையடுத்து, கர்ப்பிணியின் மரணத்துக்கு நீதிகேட்டு அங்குத் திரண்ட பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கானோர், அப்பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் பலமணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இறுதியாக வேறு வழியில்லாமல், போலீஸார் தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். போலீஸார் நடத்திய தடியடியில், பலர் காயம் அடைந்தனர். மேலும் கலவரத்தில் ஈடுபட்டதாக 24 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக  வழக்கறிஞர் சங்கர் உள்பட 3 பேர் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். தற்போதுவரை இந்த வழக்கில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 23 திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்

 

இந்நிலையில் உஷாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை நேற்று முன்தினம் பெற்றுக்கொண்ட திருச்சி மாவட்ட போலீஸார், மருத்துவ அறிக்கையில் பலியான உஷா கர்ப்பிணி இல்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினர். போலீஸாரின் இந்தச் செயலை உஷாவின் கணவர் ராஜா தரப்பில் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், குழந்தை பெறுவதற்காகச் சிகிச்சை எடுத்து வந்தோம். சில வாரங்களுக்கு முன்பு உஷா, `தான் 3 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன்’ எனக் கூறினார். இருவரும் சந்தோஷத்தில் இருந்தோம். ஆனால், அதற்குள் இறந்துவிட்டார். கர்ப்பப்பையில் கட்டி இருக்க வாய்ப்பே இல்லை. என் மனைவி உயிருடன் இல்லை என்பதால் ஏதேதோ பேசுகிறார்கள். போலீஸார் இஷ்டத்துக்கு இட்டுக்கட்டுகிறார்கள்” என்றார்.

 

இந்நிலையில் உஷா மரணம் குறித்து விசாரிக்க டி.எஸ்.பி புகழேந்தி தலைமையிலான போலீஸார்,  தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், டி.எஸ்.பி புகழேந்தி,“ தற்போது கிடைத்திருப்பது முதல்கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கைதான். விரைவில் வரவிருக்கும் இறுதி அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம். அந்த அறிக்கையில்தான் முழுமையான விவரங்கள் தெரியவரும். மேலும், இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது. உஷா உயிரிழந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களைக் கைப்பற்றி சோதனை செய்து வருகிறோம்“ எனக் கூறியுள்ளார்.

 

இந்நிலையில் நேற்று மாலை மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் ஜீவா, புதிய தமிழகம் மாவட்ட செயலாளர் சங்கர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி உள்பட நிர்வாகிகள், வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்களுக்கு ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது போலீசார் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்படாது எனக் கோரிக்கை வைத்தனர். அப்போது திருச்சி மாநகர துணை ஆணையர் சக்திகணேஷ், இந்த வழக்கில் திருச்சி மாநகர போலீஸ் தடையிட முடியாது. நீங்கள் திருச்சி மாவட்ட எஸ்.பியை சந்தித்து கோரிக்கை வையுங்கள் எனக் கூற, வழக்கறிஞர்கள் குழு அதிர்ச்சியடைந்தனர்.

 

இதுகுறித்து மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் ஜீவா, போலீஸார் தங்கள் இஷ்டம் வார்த்தைகளை அள்ளித் தெளிக்கின்றனர். கடந்த 8ம் தேதி நாங்கள் நடத்திய போராட்டத்தின் போது,  கைது செய்யப்பட்டவர்களின் மீதான ஜாமின் மனுமீது நாங்கள் தலையிட மாட்டோம் என்றார்கள். ஆனால் இப்போது மாற்றிப் பேசுகிறார்கள். மேலும் உஷாவுக்கு நடந்த அநீதிக்கு எதிராக அதுபோல் இச்சம்பவத்தைக் கண்டித்து வரும் 15ம் தேதி அனைத்துக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. மேலும் உஷாவின் வழக்கைத் திசை திருப்ப நினைக்கும் போலீஸார், உஷா கர்ப்பம் இல்லை என்கிறார்கள். இந்தச் செயல்கள் முற்றிலும் தவறானது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்” என்றார்.

 

இந்நிலையில், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள  போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜின் தலையில் காயம் இருந்ததால் அவர் சிகிச்சைக்காக சிறையில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவருடைய காயத்துக்கு உரிய சிகிச்சை அளித்தபிறகும்கூட பாதுகாப்பு கருதி அவர் தொடர்ந்து மருத்துவமனையிலேயே தங்க  வைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்குச் சிறையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்