வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (14/03/2018)

கடைசி தொடர்பு:16:45 (14/03/2018)

''தமிழகத்தை வேட்டைக்காடாக்கும் புதிய திட்டம்....'' - எதைச் சொல்கிறார் வேல்முருகன்

வேல்முருகன்

திருச்சி உஷா, சென்னை அஸ்வினி படுகொலைகள், குரங்கணி தீ விபத்தில் 11 பேர் பலி... என நாடே தகித்துக் கிடக்கும் வேளையில், தமிழக அரசு, தனது ஓராண்டு சாதனை விளக்க விழா செய்தியை வெளியிட்டு மக்களின் ஒட்டுமொத்தக் கோபத்துக்கும் ஆளாகி நிற்கிறது. சமூக ஊடகத்தில் இதுபற்றிய காரசார விமர்சனங்களும், மீம்ஸும் அனலைக் கிளப்பி வருகின்றன.

''நீட், ஹைட்ரோ, காவிரி... எனப் பல்வேறு பிரச்னைகளுக்காக மத்திய அரசோடு மல்லுக்கட்ட வக்கில்லாத தமிழக அரசு சாதனை விழா எடுப்பது தமிழக மக்களுக்கான மிகப்பெரிய சோதனை!'' என்று வார்த்தைகளால் வறுத்தெடுக்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்.

வலிமையற்ற தமிழக ஆட்சியாளர்களால், தமிழகம் சந்தித்துவரும் பிரச்னைகளைப் பட்டியலிட்டுப் பேசுபவர், ''தமிழக அரசின் ஓராண்டு சாதனை விழா என்று செய்தி வெளியாகியிருக்கும் பக்கத்தில், 'எண்ணூர் கப்பல் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓராண்டு கடந்து இழப்பீடு தரவில்லை தமிழக அரசு' என்ற செய்தியும் வெளியாகியிருக்கிறது.

நீட் தேர்வு, கெயில் போன்ற திட்டங்களைக் கொண்டுவரக் கூடாது என்பதில் ஜெயலலிதா உறுதியாக இருந்தார். ஆனால், இந்த அரசு கோட்டை விட்டுவிட்டது. பாலாறு விவகாரத்தில், ஆந்திர அரசு 50-க்கும் மேற்பட்ட தடுப்பணைகளைக் கட்டிவிட்டதால், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டப் பகுதிகள் பாலைவனமாகவே மாறிவிட்டன. வர்தா புயலால் பாதிக்கப்பட்ட சிறுகுறு விவசாயிகளுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கப்படவில்லை. 2016-17-ம் ஆண்டில் மட்டும் வறட்சியின் கொடுமையால் 1,600 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள். இந்த அவலத்தைத் தடுக்க முடியாத இந்த அரசு, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான காப்பீட்டுத் தொகையைக் கொடுப்பதில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் செய்துவரும் மோசடிகளையும் சரிசெய்ய முன்வரவில்லை. இன்றைய தினம்கூட தஞ்சாவூரில் இதற்காக விவசாயிகள் போராட்டம் செய்திருக்கிறார்கள். 

திருவண்ணாமலையைச் சேர்ந்த ஞானசேகரன் என்ற விவசாயி, வங்கிக் கடனில் வாங்கிய டிராக்டருக்காக இன்னும் மூன்று தவணைகள் மட்டுமே கட்டவேண்டியிருந்தது. விவசாயம் பொய்த்துப்போன நஷ்டத்தில் இருந்த அந்த விவசாயியை சம்பந்தப்பட்ட வங்கி நிறுவனம், தனியார் கூலிப்படையை வைத்து அடித்து உதைத்ததில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்துபோனார். 

ஒகி புயலில் பாதிக்கப்பட்ட 193 குடும்பங்களுக்கு லட்சக்கணக்கில் நிவாரணத் தொகை கொடுக்கப்போவதாக இப்போது இந்த அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இந்த 193 பேரும் ஒகி புயலில் சிக்கிக் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தபோது,  'எப்படியும் அரசாங்கம் நம்மை வந்து காப்பாற்றிவிடும்' என்ற கடைசித் துளி நம்பிக்கையைக்கூட காப்பாற்ற வக்கில்லாத இந்த அரசு, இப்போது விழா எடுப்பது எவ்வளவு பெரிய துரோகம்.

எடப்பாடி பழனிசாமி

செம்மரம் வெட்டப்போனதாகக் குற்றம் சுமத்தி, தமிழர்களை அடித்து உதைத்து மூன்றரை அடி ஆழமுள்ள குட்டையில் மூழ்கடித்துக் கொன்றது ஆந்திர அரசு. ஆனால், 'நாங்கள் துரத்தினோம்.... அவர்கள் ஏரியில் விழுந்து இறந்துபோனார்கள்' என்று அப்பட்டமாகப் பொய் சொல்லி முடித்தது. இதனை எதிர்த்துக் கேட்கக்கூடத் திராணியில்லை இந்த தமிழக அரசுக்கு.

மெரினா போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை அடித்து உதைத்து, மீனவர் குடிசைகளைக் கொளுத்தி துவம்சம் செய்தது, முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு அஞ்சலி செலுத்தப் போனவர்களைக் குண்டாஸில் கைது செய்தது.... இவைதானே இந்த அரசின் சாதனை?

கல்லூரியில் படிக்கும் வளர்மதி என்ற சிறிய பெண்ணின் மீதுகூட பொய் வழக்குப் போடுகிறார்கள். ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாகக்கூறிப் போராடிய பேராசிரியர் ஜெயராமனைப் பொய் வழக்குப்போட்டு உள்ளே தள்ளுகிறது தமிழக அரசு. ஆனால், 'ஜெயராமன் குற்றவாளி இல்லை' எனக் கூறி நீதிமன்றம் இன்றைய தினம் விடுதலை செய்திருக்கிறது. இதற்காக வெட்கப்பட வேண்டிய ஆட்சியாளர்கள் விழா எடுத்துக்கொண்டிருப்பது எவ்வளவு பெரிய கேவலம்.

மீன் பிடிக்கப்போன மீனவனை சொந்த நாட்டு ராணுவமே சுட்டுத்தள்ளுகிறது. 'நாங்கள் சுடவில்லை' என்று முதலில் சொன்னவர்கள், 'ஆமாம் நாங்கள்தான் சுட்டோம்' என்று பின்னர் தைரியமாகச் சொல்கிறார்கள். இதனையெல்லாம் எதிர்த்துக் கேட்க இவர்களுக்குத் திராணி இல்லை; அவமானமாக, அசிங்கமாகத் தெரியவில்லை.

தமிழக மீனவர்களின் 125 படகுகளைத் திருப்பித் தரமுடியாது என்று திமிராகப் பேசுகிற சுண்டைக்காய் நாடு இலங்கை. இது குறித்து தட்டிக்கேட்க முடியாத இந்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்கக்கூட முன்வராத தமிழக அரசு, சாதனை விழா எடுப்பது எவ்வளவு பெரிய காலக்கொடுமை.

மூன்றரை லட்சம் கோடிகளுக்கு மேல் தமிழக அரசுக்கு கடன் இருக்கிறது. விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், மீனவர்கள், அரசு ஊழியர்கள் என்று தமிழகத்தின் அத்தனை மக்களும் இந்த அரசுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இதற்காகவெல்லாம் வெட்கப்படாமல், 'இது சாதனை அரசு' என்று மார்தட்டி விழா எடுப்பதற்கு உங்களுக்கு எப்படி மனசு வருகிறது?

ஓ.பன்னீர்செல்வம்

முல்லைப்பெரியாறு அணை ஆய்வுக்குச் சென்ற தமிழகப் பொதுப்பணித்துறை அதிகாரிகளைக் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் அடித்து விரட்டுகிறார்கள். தமிழகத்திலிருந்து கேரளத்துக்குச் செல்லும் பால் வண்டி, பழ வண்டிகளை வழி மறித்து அடித்து, உடைத்து நொறுக்கி அனுப்புகிறார்கள். மாணவர்கள் கேரளா சென்று படிக்க அனுமதி மறுக்கிறார்கள். கர்நாடகத்தில், தமிழ் பத்திரிகை நிருபர் தமிழில் பேசிக்கொண்டிருந்ததற்காக அடித்து உதைக்கிறார்கள். சாலையில், ஒலிபெருக்கியில் தமிழில் விளம்பரம் செய்த தமிழறிஞரை அடித்து விரட்டுகிறார்கள்.

இன்றைக்குப் பெருந்துயரமாக எல்லோரையும் அழவைத்துக்கொண்டிருக்கும் குரங்கணி தீ விபத்து பற்றிப் பேசும், ஆளும் கட்சியினரே 'கடந்த 20 நாள்களாக இந்தக் காட்டுத் தீ பரவிக்கொண்டிருந்திருக்கிறது' என்று சொல்கிறார்கள். 20 நாள்களாகத் தீயை அணைக்காமல், எந்தவித முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல், 11 பேரை முழுதாக தீயின் கோர நாக்குகளுக்குத் தின்னக்கொடுத்துவிட்ட தமிழக அரசின் உள்நோக்கம்தான் என்ன? மலையும் மலை சார்ந்த மக்களையும் பயம் காட்டி விரட்டியடித்துவிட்டு, நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் நாசகார திட்டத்துக்கு நீங்களும் துணை போகிறீர்கள் என்றுதானே அர்த்தம்?

இதற்கெல்லாம் உச்சமாக, தற்போது தமிழகத்தில் உள்ள கனிம வளங்கள் அத்தனையையும் தனியார் பெருநிறுவனங்கள் சுரண்டிக் கொழுக்க வசதியாக 'ஹெல்ப் திட்டம்' என்ற புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, பண முதலைகளின் வேட்டைக்காடாக தமிழகத்தையே மாற்றியிருக்கிறார்கள். உண்மையிலேயே தமிழக அரசு சாதனை அரசுதான்!'' 

கோபமும் கொந்தளிப்புமாகப் பேசி முடிக்கிறார் வேல்முருகன். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, எதிர்க்கட்சிகளின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்குமா.... அல்லது சாதனை விழாவில் மட்டுமே கவனம் செலுத்துமா?


டிரெண்டிங் @ விகடன்