வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (14/03/2018)

கடைசி தொடர்பு:15:10 (14/03/2018)

காட்டுத் தீயால் வனஉயிர்களுக்கு ஆபத்தில்லை! - குரங்கணி கற்றுக் கொடுத்த பாடம் #KuranganiForestFire

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத் தீ சம்பவம் இதுவரை 11பேரை பலிகொண்டிருக்கிறது. சம்பவம் நடந்த இடத்திற்கு நேரடியாக விசிட் செய்தோம்.

குரங்கணி

உள்ளூர் வழிகாட்டி முருகன் நம்முடன் வந்திருந்தார். குரங்கணி அரசுப் பள்ளியின் பின்புறம் செல்லும் ஒற்றையடிப்பாதை வழியாக பயணம் ஆரம்பமானது. முதலில் செங்குத்தான ஏற்றத்தைச் சந்தித்து பின்னர் சமவெளிப்பகுதிக்குச் சென்றோம். கீழே அழகான குரங்கணி கிராமம் தெரிந்தது. ஒற்றையடிப்பாதையைப் பிடித்துக்கொண்டு நேராக நடக்க ஆரம்பித்தோம். மழையும் நம்மை தொடர்ந்துகொண்டது. அரை மணி நேரப் பயணத்திற்குப் பிறகு சிறிய நீர்வீழ்ச்சி போன்ற இடத்தில் இரண்டு பாதை பிரிந்தது. ஒன்று சாலைப்பாறை செல்லும் வழி, மற்றொன்று கொழுக்குமலை செல்லும் வழி. நம்மை கொழுக்குமலை செல்லும் வழியாகக் கூட்டிச் சென்றார் முருகன். கரடுமுரடான பாதை, செங்குத்தும், பள்ளமுமாக சுமார் 2மணி நேரம் பயணம் நீண்டது. வழியெங்கிலும் கருகிய புற்களின் அடிப்பாகமும், எரிந்துபோன மரங்களும் மட்டுமே கண்களுக்குத் தெரிந்தது. மழை அதிகமானதால் நம்மை எச்சரித்த முருகன், ''இதற்கு மேல் செல்வது ஆபத்தானது.’’ என்றார்.

குரங்கணி

ஒரு இடத்தில் நம்மை நிறுத்திய முருகன், ஐநூறு மீட்டர் தூரத்தில் இருந்த பெரிய மரத்தை கை காட்டி, ‘’அங்கேதான் அவர்கள் அமர்ந்து சாப்பிட்டார்கள். தீ அவர்களை நெருங்கியதும் இப்போது நாம் நின்றுகொண்டிருக்கும் இடத்தை நோக்கித்தான் ஓடிவந்தார்கள். சிலர் இந்தப் பள்ளத்தில் விழுந்தார்கள்…’’ என கீழே காட்டினார், கீழே, பல நூறு அடி பெரிய பள்ளம்.! தீயின் வெப்பம் தாளாமல் 9 பேர் உயிர்விட்ட இடத்தை பார்த்துக்கொண்டிருக்கும் போது, ‘’சார்… இங்க பாருங்க நத்தை.!’’ என்றார் முருகன். சுற்றிலும் கருமை போர்த்திய இடத்தில் வெண்பழுப்பு நிறத்தில் ஒரு நத்தை மெதுவாக ஊர்ந்து சென்றது. அதன் பின் பகுதி சாம்பல் அப்பிக்கிடந்தது. அருகிலேயே எறும்புகள் தங்கள் இடத்தை சுத்தம் செய்துகொண்டிருந்தன.

‘’இயற்கையைப் பார்த்தீங்களா சார்… இந்தக் காட்டுத்தீயால் எந்த உயிரினத்திற்கும் ஆபத்து ஏற்படவில்லை. எல்லாம் தங்களை காத்துக்கொள்வது எப்படினு கத்துவச்சுருக்குதுங்க… நீங்க வேணா பாருங்க எல்லாம் ஒரு மாசத்துல சரியாகிடும். இதே இடத்தில் பசுமையா புல் வளர்ந்திரும்…’’ என்றார். மழை அதிகமானதால் நம்மைப் பாதுகாப்பாக கீழே அழைத்து வந்தார் முருகன். இயற்கை நமக்கானது, எப்போதும் அது நமக்கு பாடம் கற்பித்துக்கொண்டே இருக்கிறது. படிக்கத்தான் மறுக்கிறான் மனிதன்.!