வெளியிடப்பட்ட நேரம்: 15:51 (14/03/2018)

கடைசி தொடர்பு:15:57 (14/03/2018)

`சார், 10 கிலோ இல்ல; கொஞ்ச தங்கம்தான்' - போனில் இன்ஸ்பெக்டரை மிரளவைத்த கொள்ளையன்

நகைக்கடை கொள்ளை

மீடியா, பத்திரிகைகளில் வெளியான செய்தியைப்போல 10 கிலோ தங்கம், 3 கிலோ வெள்ளி ஆகிய பொருள்களைக் கொள்ளையடிக்கவில்லை. அதைவிட குறைவாகத்தான் கொள்ளையடித்தோம் என்று போலீஸ் அதிகாரியிடம் பேசிய கொள்ளையன் மற்றும் அவரின் கூட்டாளி ஆகியோரிடம் போலீஸார் விசாரித்துவருகின்றனர். 

சென்னை அண்ணாநகர், 2 வது அவென்யூவில் பிரபல ஜூவல்லரி கடை ஒன்று உள்ளது. இந்தக் கடையைத் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர், கடந்த 10 ஆண்டுகளாக நடத்திவருகிறார். கடந்த 6-ம் தேதி நகைக்கடையின் பூட்டை உடைத்து 10 கிலோ தங்கம், 3 கிலோ வெள்ளி பொருள்கள் மற்றும் பணம் ஆகியவை கொள்ளைபோனது. இதுதொடர்பாக நகைக்கடை உரிமையாளர் திருமங்கலம் போலீஸில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார், கொள்ளையர்களைத் தேடிவந்தனர்.

இந்தநிலையில் கொள்ளையர்களைத் தேடும் தனிப்படை போலீஸ் அதிகாரி ஒருவருக்கு சில நாள்களுக்கு முன்பு போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய கொள்ளையன், `நகைக்கடையில் கொள்ளையடித்தது நான்தான் சார். 10 கிலோ தங்கம், 3 கிலோ வெள்ளி பொருள்கள், பணம் ஆகியவற்றைக் கொள்ளையடிக்கவில்லை. அதைவிட குறைவாகத்தான் கொள்ளையடித்தோம். பத்திரிகை, மீடியாக்களில் வெளியிடப்பட்ட செய்தியைப் பார்த்தால் எங்களுக்கே அதிர்ச்சியாக உள்ளது. அதன் அடிப்படையில் எங்களுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்குமோ என்ற அச்சமும் உள்ளது' என்று கூறியிருக்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸ் அதிகாரி, கொள்ளையனை உடனடியாகச் சரண் அடையும்படி தெரிவித்துள்ளார். அதன்பேரில் கொள்ளையன் சரண் அடைந்துள்ளார் என்று சொல்கின்றனர் விவரம் தெரிந்த காக்கிகள்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "கொள்ளையர்களைத் தேடியபோது, எங்களுக்குச் சிலர்மீது சந்தேகம் இருந்தது. எங்களின் சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில் அந்தப் போன் அழைப்பு வந்தது. தனிப்படையில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவரிடம் பேசியது பாடிகுப்பத்தைச் சேர்ந்த ஜான்பாஸ்கோ என்று தெரியவந்தது. இவர்மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவரும் கொடுங்கையூரைச் சேர்ந்த தேவராஜனும் சேர்ந்துதான் கொள்ளையடித்துள்ளனர். தேவராஜன்மீது 12 வழக்குகள் உள்ளன. போலீஸ் சரித்திரப் பதிவேட்டில் கத்திக்குத்து தேவராஜன் என்றுதான் அவரது பெயர் உள்ளது. அவர்கள் இருவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி கொள்ளையடித்த தங்கம், வெள்ளி மற்றும் பணம் ஆகியவற்றில் 90 சதவிகிதத்துக்கும் மேல் பறிமுதல் செய்துள்ளோம்" என்றனர்.

இதனால், இன்று அல்லது நாளை, கொள்ளையர்கள் குறித்து போலீஸார் விரிவான தகவலை வெளியிட உள்ளதாகப் போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.