வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (14/03/2018)

கடைசி தொடர்பு:17:40 (14/03/2018)

`யானை உயிரைக் காவு வாங்கியதா மின்சார வேலி?’ கோவை அருகே நடந்த சோகம்!

கோவை அருகே, ஆண் யானை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யானை

கோவை, புறநகர் பகுதிகளில் அதிகளவு யானைகள் உள்ளன. நகரத்தின் வளர்ச்சியால், மனித – வனவிலங்கு மோதல்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலும் வனவிலங்குகள்தாம் பாதிக்கப்படுகின்றன. அதிலும் யானைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் அதிகம். ஆலாந்துறை அடுத்த மத்தியப்பாளையத்தில் சந்திரன் என்பவருக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு யானைகள் அதிகம் காணப்படும். சந்திரன் தனது தோட்டத்தில் அரசாணிக்காய் பயிரிட்டுள்ளார். இதையடுத்து, சுமார் 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை, உணவு தேடி சந்திரனின் தோட்டத்துக்கு நேற்று இரவு வந்துள்ளது.

இந்நிலையில், அதே யானை இன்று அதிகாலை இறந்த நிலையில் காணப்பட்டது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். யானை இறந்துகிடந்த இடத்தின் அருகிலேயே மின்சார வேலி உள்ளது. இதனால், மின்சாரம் தாக்கித்தான் யானை உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், "இந்த யானை இங்கதான் அடிக்கடி சுத்திகிட்டு இருக்கும். நல்லாத்தான் இருந்துச்சு. உடம்பு சரியில்லாத மாதிரில்லாம் இல்ல "என்றனர்.

வனத்துறையிடம் கேட்டபோது, "பிரேத பரிசோதனை நடத்தியுள்ளோம். அதன் முடிவுகள் வந்த பிறகுதான் யானை உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும்" என்றனர்.

இதனிடையே, "வனத்துறையினரின் அலட்சியத்தால்தான் யானைகளின் உயிரிழப்பு தொடர்ந்து வருகின்றன" எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.