பி.எஸ்.என்.எல் இணைப்பு முறைகேடு வழக்கிலிருந்து மாறன் சகோதரர்கள் விடுதலை!

சட்டத்துக்கு விரோதமான தொலைபேசி இணைப்பு முறைகேடு தொடர்பான வழக்கிலிருந்து மாறன் சகோதரர்கள் உட்பட 7 பேரை விடுதலை செய்து சென்னை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மாறன் சகோதரர்கள்

கடந்த 2004-2007ம் ஆண்டுகளில் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் தயாநிதி மாறன். இவர் தன்னுடைய அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி கோபாலபுரம், போட் கிளப் சாலையில் அமைந்துள்ள அவருடைய வீட்டிற்கு சட்டத்திற்கு விரோதமாக அதிவேக உயர் இணைப்புகள் கொண்ட தொலைபேசி இணைப்புகளை ஏற்படுத்திக்கொண்டதாகவும், அதன் பின்னர் அந்த இணைப்புகளை தவறான வகையில் சன் டிவிக்குப் பயன்படுத்தியதால் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.1.78 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் சிபிஐ சார்பில் குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது. பின்னர், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, குற்றம் சுமத்தப்பட்டது.

2011 ம் ஆண்டு இது தொடர்பான விசாரணை தொடங்கி, 2013 ம் ஆண்டு ஜூலை 23 அன்று சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இதில், தயாநிதி மாறன், கலாநிதி மாறன், சென்னை பிஎஸ்என்எல் பொது மேலாளராக இருந்த கே.பிரம்மநாதன், தயாநிதிமாறனின் தனிச்செயலாளராக இருந்த கவுதமன், சன் தொலைக்காட்சியின் முதன்மைத் தொழில்நுட்ப அதிகாரியான கண்ணன், எலெக்ட்ரீஷியன் ரவி உள்ளிட்ட 7 பேர் மீது டெல்லி சிபிஐ போலீஸார் வழக்குப் பதிவுசெய்தனர்.

பின், இந்த வழக்கு தொடர்பாக சன் டிவி முதன்மைத் தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், எலக்ட்ரீசியன் ரவி, தயாநிதி மாறனின் தனிச்செயலாளர் கவுதமன் ஆகியோரை கடந்த 2015 ம் ஆண்டு ஜனவரியில் சிபிஐ அதிகாரிகள் சென்னையில் கைது செய்தனர்.
மேலும், சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2016  ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர்கள் 7 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்தக் குற்றப்பத்திரிகையில் குற்றவாளிகள் அனைவரும் கூட்டுச் சதி உள்ளிட்ட சட்டப்பிரிவின் கீழ் மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்று விளக்கமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கானது சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி நடராஜன் முன் நிலுவையில் இருந்து வந்தது. மேலும், கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம், குற்றஞ்சாட்டப்பட்ட, தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேருக்கும் 2500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று கூறி கடந்த 2017 ம் ஆண்டு அக்டோபரில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரும் மனுத்தாக்கல் செய்தனர்.

நவம்பர் 10 ம் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, 7 பேரையும் விடுவிக்கக் கூடாது என்றும், அவர்களின் குற்றங்களுக்கு ஆதாரம் இருப்பதாகவும் சிபிஐ தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் ஆவணங்களை தாங்கள் ஆய்வு செய்து விளக்கமளிக்கிறோம். எனவே, அதற்கு மூன்று வாரக் கால அவகாசம் வேண்டுமென மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட ஏழு பேர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதனை ஏற்க மறுத்த நீதிபதி நடராஜன் 10 நாள்கள் மட்டுமே அவகாசம் வழங்கி வழக்கை நவம்பர் 21ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். அதன்படி, நவம்பர் 21ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்த வழக்கில் மாறன் சகோதரர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கின் விசாரணையை டிசம்பர் மாதம் 11ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தொடர்ந்து நடைபெற்று வந்த விசாரணையில் கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி சிபிஐ தரப்பில் எழுத்துபூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய நீதிபதி நடராஜன் உத்தரவிட்டார். நீதிபதி உத்தரவின் பேரில் கடந்த மார்ச் 6ம் தேதி எழுத்துபூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் கடந்த வாரம் வந்த விசாரணையில் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு மார்ச் 14ம் தேதி (இன்று) வழங்கப்படும் என நீதிபதி நடராஜன் தெரிவித்தார். இதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாறன் சகோதரர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து, பிற்பகல் 2.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி நடராஜன் அறிவித்தார். அதன்படி பிற்பகலில் தீர்ப்பளித்த நீதிபதி, இந்த வழக்கில் முகாந்திரம் இல்லையென கூறி தயாநிதிமாறன் கலாநிதிமாறன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்து உத்தரவிட்டார். கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் தற்போது 7 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!