'கடன்வாங்கி திருட்டுப்பொருளை கொடுக்கச்சொல்றாங்க'- கமிஷனர் ஆபீஸில் போலீஸூக்கு எதிராக கதறிய திருடன்

சிவராஜ்

திருந்திவாழ வேண்டும் என்று நினைத்த என்னை, குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதாக போலீஸ் மிரட்டுவதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தவர், திடீரென தீக்குளிக்க முயன்றார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.   

சென்னை, சேத்துப்பட்டு, புதிய பூபதி நகரைச் சேர்ந்தவர் சிவராஜ். இவர், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, "பழவந்தாங்கல் போலீஸ் நிலைய குற்றப்பிரிவு போலீஸார், என்னைக் கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். அதிலிருந்து 13.3.2018ம் தேதி சிறையிலிருந்து வெளியில் வந்தேன். ஆனால், பழவந்ததாங்கல் போலீஸார் என்னை மீண்டும் கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதாக மிரட்டுகின்றனர்.

அதனால், நான் மனஉளைச்சலில் உள்ளேன். நானும், எனது குடும்பத்தினரும் நிம்மதியாக வாழ முடியவில்லை. நான் திருந்திவாழ உதவ வேண்டும். எனக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்கள் படிக்கின்றனர். அவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு என் மீது பொய் வழக்குப் போடுவதை தடுக்க வேண்டும். இனிமேல், நான் எந்தவித குற்றச் செயல்களிலும் ஈடுபட மாட்டேன்" என்று தெரிவித்துக்கொள்கிறேன். புகார் கொடுக்க வந்த சிவராஜ், தீக்குளிக்க முயற்சி செய்தார். அதை போலீஸார் தடுத்தனர். 

நிருபர்களிடம் சிவராஜ் கூறுகையில், ‘நான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருடனாக வாழ்ந்தேன். இப்போது திருந்தி வாழ்கிறேன். ஆனால், பழவந்தாங்கல் போலீஸார் எங்கு திருட்டுச் சம்பவங்கள் நடந்தாலும் என்னை விசாரணைக்கு அழைத்துச் செல்கின்றனர். திருட்டு போன பொருள்களை கடன் வாங்கியாவது எங்களிடம் கொண்டு வந்து ஒப்படைத்து விடு என தொல்லை செய்கின்றனர். நான் திருடனாய் வாழ்ந்தது குற்றம்தான். ஆனால், இப்போது திருந்திவிட்டேன். எனது குடும்ப எதிர்கால நலனைக் கருதியாவது போலீஸார் என் மீது பொய் வழக்குகள் போடுவதை தடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் கருணை மனு அளிப்பதற்காக வந்தேன்'' என தெரிவித்தார். அவரை வேப்பேரி போலீஸார் சமாதானப்படுத்தி மீண்டும் பழவந்தாங்கல் போலீஸ் நிலையத்துக்கே அனுப்பிவைத்தனர். 

போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "சிவராஜ் மீது 6 க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. பூட்டை உடைத்து திருடுவதில் சிவராஜ் கில்லாடி. அவர் மீதுள்ள வழக்குகளின் அடிப்படையில்தான் குண்டர் சட்டத்தில் கைது செய்தோம். அவரை நாங்கள் மிரட்டவில்லை" என்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!