`அவர்களை நம்பிப் போக வேண்டாம்' - கொடைக்கானலில் ட்ரெக்கிங்குக்குத் தடைபோட்ட வனத்துறை!

கொடைக்கானல் - வனத்துறை

கொடைக்கானலில் ட்ரெக்கிங் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

குரங்கணியை விஞ்சும் வகையில் கொடைக்கானலில் அதிகளவில் மலையேற்றம் நடந்து வருகிறது. போதுமான பாதுகாப்பு வசதிகள் முறையான பயிற்சிகள் இல்லாமல் பலர் ட்ரெக்கிங்கில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் குரங்கணி சம்பவத்தைத் தொடர்ந்து கொடைக்கானல் மலையிலும் மலையேற்றத்துக்குத் தடை விதித்துள்ளது வனத்துறை. சில நாள்களாகக் கொடைக்கானலில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. பட்டா நிலத்துக்குத் தீ வைத்தல், புகைபிடித்தல், அதிக வெப்பம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திடீர் திடீரென வனம் தீப்பிடித்து எரிகிறது. இதை அணைக்க வனத்துறையினர் கடுமையாகப் போராடி வருகிறார்கள். இந்நிலையில் கொடைக்கானல் வனப்பகுதியில் ட்ரெக்கிங் செல்ல தற்காலிகத் தடை விதித்துள்ளது வனத்துறை.

இது தொடர்பாகப் பேசிய கொடைக்கானல் வன உயிரின காப்பாளர் முருகன், ‘‘தீ விபத்து ஏற்பட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இயற்கையாகத் தீப்பிடிப்பதைவிட, மனிதர்களால் ஏற்படுத்தப்படும் விபத்துகள்தான் அதிகம். வனப்பகுதிக்குச் சுற்றுலா வருபவர்கள், வனத்தை எந்த வகையிலும் தொந்தரவு செய்யாமல் செல்ல வேண்டும். எளிதில் தீப்பிடிக்கும் பொருள்களைக் கொண்டு செல்லக் கூடாது. வனப்பகுதிக்குள் புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும். வனப்பகுதிக்கு அருகே பட்டா நிலம் வைத்திருப்பவர்கள், கோடைக்காலத்தில் தீ வைத்துக் கொளுத்துவதைத் தவிர்க்க வேண்டும். தனிமனித ஒழுக்கம் பெரும்பாலான விபத்துகளைத் தடுக்கும். பொதுமக்கள், மாணவர்கள் வனம் பற்றிய புரிதலை வளர்த்துக்கொண்டால் எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்கலாம். 

தற்போது கொடைக்கானல் வனப்பகுதிக்குள் ட்ரெக்கிங் செல்பவர்கள் வனத்துறையினரிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும். அப்படி அனுமதி பெற்ற குழுவினருடன் வனத்துறை ஊழியர்கள் செல்வார்கள். கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளிடம் யாராவது ட்ரெக்கிங் அழைத்துச் செல்கிறேன் எனச் சொன்னால் அவர்களை நம்பிப் போக வேண்டாம். ட்ரெக்கிங் அழைத்துச் செல்வதற்கான வனத்துறை அனுமதி இருக்கிறதா என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். அப்படி அவர்கள் அனுமதி கடிதம் காட்டினாலும் வனத்துறை ஊழியர்கள் இல்லாமல் வனப்பகுதிக்குள் டிரெக்கிங் செல்லக் கூடாது. அப்படி செல்வது வனச்சட்டப்படி குற்றம். அத்துமீறி ட்ரெக்கிங் செல்பவர்கள்மீது வனப்பாதுகாப்புச் சட்டம் கடுமையாகப் பாயும்’’ என்றார்.

தற்போது நிலவும் சூழலில் கொடைக்கானல் மலையில் மலையேற்றம் செய்வது அவ்வளவு பாதுகாப்பான சூழ்நிலையில்லை என்பதால், சுற்றுலாப் பயணிகளும் அதைத் தவிர்க்க வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!