டாக்டர் மனைவிக்கு அரசு மானிய ஸ்கூட்டரை வழங்கிய அமைச்சர் காமராஜ்! சர்ச்சையில் முடிந்த விழா

மன்னார்குடியில் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் வழங்கப்பட்ட அம்மா மானிய விலை ஸ்கூட்டர் தகுதியானவர்களுக்குத் தரப்படவில்லை என்றும் அரசு விதியைப் பின்பற்றாமல் செல்வந்தர்களுக்கும் அமைச்சருக்கு வேண்டியவர்களுக்கும் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மானிய விலை ஸ்கூட்டர் வழங்கப்படும் என ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன் படி முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அரசு ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் விழாவில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தியது. அப்போது, பிரதமர் மோடி சென்னை கலைவாணர் அரங்கில் மானிய விலை ஸ்கூட்டர் கொடுக்கும் திட்டத்தை தொடங்கிவைத்து பெண்களுக்கு மானியவிலை ஸ்கூட்டரும் கொடுத்தார்.

அதனை தொடர்ந்து மற்ற மாவட்டங்களில் அமைச்சர்கள் தலைமையில் ஸ்கூட்டர் கொடுக்கப்பட்டு வருகிறது. இதை ஒரு பெரிய விழாவாகவே நடத்தி வருகின்றனர் அதிமுகவினர். உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அவரது சொந்த மாவட்டமான திருவாரூரில் சில தினங்களுக்கு முன் மானிய விலை ஸ்கூட்டரை வழங்கினார். பின்னர், மன்னார்குடியிலும் இந்தத் திட்டத்தின் மூலம் ஏழு பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கினார். இதில், அரசின் சார்பில் சொல்லப்பட்ட எந்த விதியையும் பின்பற்றாததோடு, தகுதியானவர்களுக்குக் கொடுக்காமல் அமைச்சருக்கு வேண்டியவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தில் அமைச்சருக்கு ஆதரவாக கலெக்டர் நிர்மல்ராஜ் செயல்படுகிறார். எனவே, அவர் மீது வழக்கு தொடுக்கப் போவதாகவும் டிடிவி அணியின் மன்னார்குடி நகரச் செயலாளர் ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார்.

ஆனந்தராஜ்ஆனந்தராஜிடம் பேசினோம். ''மன்னார்குடி டவுனில் மானிய விலை ஸ்கூட்டர் கேட்டு 595 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அதில் 545 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. அதில் தகுதியானவர்கள் யார் என கலெக்டர் நிர்மல்ராஜ் உத்தரவின் பேரில் ஆராய வேண்டும். அப்படி எதுவும் செய்யவில்லை.மேலும் மாற்றுத்திறனாளி, விதவை, 35 வயதுக்கு மேல் திருமணம் ஆகாதவர்கள், பட்டியல் இனத்தவர்கள் மற்றும் திருநங்கைகள் போன்றோருக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அரசு சார்பில் சொல்லப்பட்டுள்ளது.

இதை எதையுமே பின்பற்றாமல் அமைச்சர் ஆர்.காமராஜ் முதல்கட்டமாக மன்னார்குடி டவுனில் ஏழு பெண்களுக்கு மானியவிலை ஸ்கூட்டர் வழங்கியுள்ளார். இதில் டாக்டர் ஒருவரின் மனைவி, மற்றும் வசதி வாய்ப்பு படைத்த ஒரு பெண் என அமைச்சருக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இதில் ஒரு பட்டியல் இனப் பெண்கூட இல்லை என்பது வேதனை. அமைச்சரின் இந்தச் செயல்பாட்டுக்கு கலெக்டர் நிர்மல்ராஜ் உடந்தையாக இருக்கிறார். இது குறித்து அவர் மீது வழக்கு தொடரப் போகிறேன்.

ஆரம்பத்திலேயே தகுதியானவர்களுக்குக் கொடுக்காமல் இப்படி செய்பவர்கள் இன்னும் போகப்போக என்னென்ன செய்வார்கள். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்தத் திட்டத்தின் மூலம் ஏழை எளிய பெண்கள் பயன் பெற வேண்டும் என நினைத்தார். அதை செயல்படுத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்'' என்றார்.

அமைச்சர் ஆர்.காமராஜ் தரப்போ, எடப்பாடி பழனிசாமி அரசு செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தையும் குறை கூறுவதிலேயே டிடிவி ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். அதில் இதுவும் ஒன்று மற்றப்படி நாங்கள் மானிய விலை ஸ்கூட்டரை தகுதியானவர்களுக்கே கொடுத்திருக்கிறோம்'' என்று கூறியது.                                   
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!