Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`சமூக நீதி காக்க கௌசல்யாவுடன் இணைந்து நிற்போம்!' - சங்கர் சமூகநீதி அறக்கட்டளை நிகழ்வில் சூளுரை

சங்கர் சமூகநீதி அறக்கட்டளை

தமிழகமே பதறித் துடித்த உடுமலை சங்கரின் ஆணவப் படுகொலை நிகழ்ந்து 2 வருடம் கடந்துவிட்டது. தற்போது சங்கரின் 2-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில், சங்கர் சமூகநீதி அறக்கட்டளைத் தொடங்கியிருக்கிறார் அவர் மனைவி கௌசல்யா. இந்நிகழ்வில், சாதிய ஆணவக் கொலைகளை எதிர்க்கும் பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் கௌசல்யாவுடன் கைகோத்திருக்கிறார்கள்.

அற்புதம்மாள், சங்கர் சமூகநீதி அறக்கட்டளை

நிகழ்வில் பேசிய, பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள், "சாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் விளிம்புநிலை மனிதர்களுக்காகவும் ஒரு அறக்கட்டளையை உருவாக்கி, என்னால் அனைவருக்கும் உதவ முடியும் என்றுகூறி, தலை நிமிர்ந்து நடமாடும் இந்தப் பெண்ணை நாம் வாழ்த்தியாக வேண்டும். இந்தச் சிறுவயதில், ஒரு பெரிய மனப்பான்மையை அவர் வெளிப்படுத்தியிருப்பது பாராட்டப்பட வேண்டியது என்றார்.

கோபி நயினார் , சங்கர் சமூகநீதி அறக்கட்டளை


 
அடுத்ததாகப் பேசிய திரைப்பட இயக்குநர் அறம் கோபி, "சாதி எதிர்ப்புப் போராட்டத்தை இணைத்துக்கொள்ளாமல், இனி எந்தவொரு விடுதலையையும் முன்னெடுத்துச் செல்ல முடியாது என்பதற்கான மிகப்பெரிய வேலைத் திட்டமாகவே இந்த நிகழ்வை நான் பார்க்கிறேன் என்றார்.

திருமுருகன் காந்தி , சங்கர் சமூகநீதி அறக்கட்டளை

மே - 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி பேசும்போது, "பெரியாரிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள், தலித்தியவாதிகள், தமிழ்த் தேசியவாதிகள் என்றெல்லாம் பிரித்துப் பார்க்காமல், மானுட விடுதலைக்காகப் போராடும் அனைவரையும் ஒன்றாக இந்த மேடையில் ஏற்றியிருப்பதன் மூலம், கடந்த 2 வருடங்களில் கௌசல்யா எப்படிப்பட்டவராக மாறியிருக்கிறார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு ஆழமான மாற்றத்தை இவரிடம் காண முடிகிறது. பெண்கள் ஆண்களுக்கு இணையாக இருக்க வேண்டும் என்று பேசுகிறார்கள். அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. ஆண்கள் இன்றைக்கும் சல்லிப் பயலாகத்தான் இருக்கிறார்கள். இங்கு நடைபெரும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணமாக ஆண்கள் இருக்கிறார்கள். எனவே, ஆண்களுக்கு நிகராக என்று இல்லாமல், ஆண்களுக்குப் படிப்பினையைக் கற்றுத்தருபவர்களாகப் பெண்கள் இருக்க வேண்டும். ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்று முழக்கத்தை முன்வைத்துள்ள சங்கர் சமூக நீதி அறக்கட்டளைக்கு அனைத்து வகையிலும், மே-17 இயக்கம் துணையாக நிற்கும்’’ என்றார். 

எவிடென்ஸ் கதிர் பேசுகையில், ``திவ்யாவும் ஸ்வாதியும் நம் பக்கம் நிற்கவில்லை. ஆனால், கௌசல்யா இன்றும் நம்முடனே நிற்கிறார். யாராலும் கௌசல்யாவை விலைகொடுத்து வாங்கிவிட முடியவில்லை. அடித்தட்டு சமூகத்துக்கான பங்களிப்பை இப்போது கௌசல்யா வழங்கிவருகிறார். இந்த நூற்றாண்டில் என் கண்ணுக்குத் தெரிந்த மிக முக்கிய சமூகப் போராளியாகவே நான் கௌசல்யாவைப் பார்க்கிறேன்’’ என்றார்.

சமுத்திரக்கனி , சங்கர் சமூகநீதி அறக்கட்டளை

திரைப்பட இயக்குநர் சமுத்திரக்கனி பேசும்போது, "சங்கரின் ஆசை, கனவு, எதிர்காலத் திட்டங்கள் என அனைத்தையும் இந்தச் சாதியம் சிதைத்துவிட்டதே என்ற வலி எனக்கு அதிகமாக இருக்கிறது. இந்த நொடி சாதி யாரைத் துரத்திக்கொண்டு இருக்கிறதோ என்ற பயமும் இருக்கிறது. சாதிய அமைப்புகளின் கூட்டத்தைவிட, சாதி அற்றவர்களின் கூட்டம் அதிகமானால்தான் சாத்தியமாகும்’’ என்றார்.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கு.ராமகிருஷ்ணன் பேசும்போது, " ஹெச்.ராஜா தன்னுடைய பெயருக்குப் பின்னால் சர்மா என்ற பெயரை இணைக்க முடியாமல்போனதற்கு பெரியார் காரணமாக இருந்ததால்தான், அவருடைய சிலையை அகற்ற வேண்டும் என துடிக்கிறார். சாதி எங்கு இருக்கிறது என்று பலர் கேட்கிறார்கள். இப்போது சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தில் பயிலும் 6-ம் வகுப்பு மாணவர்களின் புத்தகத்தில்கூட சாதி திணிக்கப்பட்டுதான் இருக்கிறது. இன்றைக்கு நமக்கு கௌசல்யா என்ற மிகச் சிறந்த சாதி ஒழிப்புப் போராளி கிடைத்திருக்கிறார்’’ என்றார்.

வளர்மதி , சங்கர் சமூகநீதி அறக்கட்டளை

பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தைச் சேர்ந்த வளர்மதி, "கார்ல் மார்க்ஸ் - ஜென்னி, லெனின் - க்ரூப்ஸ்கயா, எழுத்தாளர் மஹாஸ்வேதா தேவி, அருந்ததி ராய், கவுரி லங்கேஷ், தற்கொலை படை வீராங்கனை குயிலி, மூவர் விடுதலைக்காக உயிர் நீத்த செங்கொடி, நீட் தேர்வை எதிர்த்துப் போராடி இறந்த மாணவி அனிதா என இவ்வுலகில் சமூக நீதிக்காகப் போராடிய எண்ணற்ற பெண் தோழர்களின் வரிசையில் இன்று கௌசல்யாவும் இணைந்திருக்கிறார். ஆயிரக்கணக்கான சங்கர்கள் சிந்திச் சென்ற செங்குறுதியில் முளைத்த விதைதான் இந்தக் கௌசல்யா என்றார்.

2 ஆண்டுகளுக்கு முன் சங்கரின் ரத்தம் சிந்திய அதே இடத்தில், தற்போது நின்றுகொண்டு, சாதிய ஆதிக்கத்தை எதிர்க்கவும் சமூக நீதி காக்கவும் நாங்கள் என்றைக்கும் கௌசல்யாவுடன் இணைந்து நிற்போம் என அனைவரும் ஒன்றாகச் சூளுரைத்திருக்கிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ

Advertisement