`பரோல் காவல் செலவை அரசு ஏற்க வேண்டும்' - ரவிச்சந்திரன் வழக்கில் உயர் நீதிமன்றம் | TN government should take care Ravichandran's parole expenses, reserves Madurai hc bench

வெளியிடப்பட்ட நேரம்: 17:09 (14/03/2018)

கடைசி தொடர்பு:17:19 (14/03/2018)

`பரோல் காவல் செலவை அரசு ஏற்க வேண்டும்' - ரவிச்சந்திரன் வழக்கில் உயர் நீதிமன்றம்

சிறையில் தான் சம்பாதித்த பணத்தைகூட ரவிச்சந்திரன் நன்கொடையாக வழங்கியுள்ளார். தற்போது கொடுக்கப்பட்ட பரோலின் விதிகளின்படி அந்தச் செலவுகளை அரசுதான் ஏற்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ரவிச்சந்திரன்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு மதுரை சிறையில் இருந்துவரும் ரவிச்சந்திரன், ஒரு மாதம் பரோல் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ''26 ஆண்டுகளில் 3 முறை மட்டுமே சாதாரண விடுப்பில் சென்றுள்ளேன். எனக்கு பரோலில் செல்ல உரிமை உண்டு எனத் தமிழக முதன்மைச் செயலர் எனக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். கடந்த 2012-ல் பரோலில் வந்த நிலையில் 2014-க்குப் பிறகு, பரோலில் வரத் தகுதி உண்டு. எனவே, 26 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் எனது குடும்பத்தின் சொத்துப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காக ஒரு மாத காலம் நீண்ட பரோலில் செல்ல அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.

பல கட்ட விசாரணைக்குப் பின் நீதிபதிகள், ரவிச்சந்திரனுக்கு மார்ச் 5 முதல் 19-ம் தேதி வரை பரோல் வழங்கி உத்தரவிட்டனர். மேலும் அரசியல் பேசக் கூடாது. பேட்டி அளிக்கக் கூடாது. விடுப்பு காலங்களில் வழக்கறிஞர்களை சந்திக்கக் கூடாது. பதிவுத்துறை அலுவலகம், மீனாட்சியம்மன் கோயிலுக்குச் செல்லலாம். சொத்துகளைப் பார்வையிடலாம் என்று நிபந்தனை விதித்து வழங்கியது நீதிமன்றம். அதனை தொடர்ந்து கடந்த 5ம் தேதி அவர் வீட்டுக்குச் சென்றார். ஆனாலும் அவரை சுற்றி டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ என உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இருந்துவருகின்றனர். இதனிடையே, காவல்துறையினருக்குப் போக்குவரத்து, உணவு உள்ளிட்ட செலவுகளான சுமார் 3 லட்ச ரூபாயை ரவிச்சந்திரன் தரப்பில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்ததால் ரவிச்சந்திரன் குடும்பத்தார் அதிர்ந்து போயினர்.

இந்நிலையில் ரவிச்சந்திரனின் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதிகளிடம் இது தொடர்பாக முறையிட்டனர். அப்போது, ரவிச்சந்திரன் சிறையிலிருந்து சம்பாதித்த 20,000 பணத்தைகூட ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்காக கடந்த ஜனவரி 19ல் வழங்கிவிட்டார். அவரிடம் போதிய பொருளாதாரம்கூட இல்லை. சட்ட விதிகளின் படி அந்தச் செலவுகளை அரசுதான் ஏற்க வேண்டும்'' எனக் கோரிக்கை வைத்தனர். இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதி விமலா கிருஷ்ணவேணி தலைமையிலான அமர்வு,  சிறையில் இருந்த ரவிச்சந்திரனிடம் எப்படி அவ்வளவு பணம் இருக்கும். தான் சம்பாதித்த பணத்தைக்கூட நன்கொடையாக வழங்கியுள்ளார். தற்போது கொடுக்கப்பட்ட பரோலின் விதிகளின்படி அந்தச் செலவுகளை அரசுதான் ஏற்க வேண்டும்'' என்று உத்தரவிட்டது.