வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (14/03/2018)

கடைசி தொடர்பு:19:20 (14/03/2018)

மருத்துவமனையில் அரசியல் பேசிய திருநாவுக்கரசர்... `எஸ்கேப்’பான டீன்

திருநாவுக்கரசர்

தேனி குரங்கணி காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டு மதுரையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று மாலை வந்தார். அப்போது நோயாளிகளின் நிலை குறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் மருதுபாண்டி விளக்கினார். மேலும், பாதிக்கப்பட்ட நபர்களின் உறவினர்களையும் சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது கட்சித் தொண்டர்களும் மருத்துவமனை முதல்வரும் உடன் இருந்தனர். "குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும். குறைந்தபட்சம் ரூ.10 லட்சமாவது நிவாரணமாக வழங்க வேண்டும். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிறந்த சிகிச்சையை இங்குள்ள மருத்துவர் குழு வழங்கிவருகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க வேண்டுமானால், மலையேற்றம் உள்ளிட்ட இயற்கை சார்ந்த பயணங்களுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் தனிக்குழு அமைத்து கண்காணிக்கப்பட வேண்டும்’' என்றார்.

அதைத் தொடர்ந்து அரசியல் தொடர்பான கேள்விகளைப் பத்திரிகையாளர்கள் கேட்டபோது திருநாவுக்கரசர் பதில் சொல்ல ஆரம்பித்தார். அப்போது மருத்துவமனை டீன், 'சார் நான் கிளம்புகிறேன்' என்று பேட்டி கொடுக்கும்போது எஸ்கேப் ஆகிவிட்டார். 'அரசியல் பேச ஆரம்பித்ததும் டீன் எஸ்கேப் ஆகிவிட்டார்' எனத் திருநாவுக்கரசர் உட்பட கட்சித்தொண்டர்கள் சிரித்ததால் மருத்துவமனையில் சிரிப்பு சத்தம் எழுந்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க