வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (14/03/2018)

கடைசி தொடர்பு:20:40 (14/03/2018)

கனமழையால் தூத்துக்குடியில் ரயில்கள் தாமதம்! பயணிகள் அவதி

தூத்துக்குடியில் பலத்த மழை பெய்து தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் சென்னையிலிருந்து தூத்துக்குடி வந்த முத்துநகர் விரைவு ரயில் மற்றும் கோவை லிங்க் விரைவு ரயில் ஆகியவை மேலூர் ரயில் நிலையத்திலேயே நிறுத்திவைக்கப்பட்டது.

இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக, தமிழகத்தில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்திலும் பரவலாக நேற்று இரவு முதல் விடியவிடிய பெய்த பலத்த மழையால் தூத்துக்குடி முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் பல இடங்களில் மழைநீர் வெளியேற முடியாமல் ஓரடி உயரத்தில் வெள்ளம் போல வீடுகளைச் சுற்றி தேங்கி நிற்கிறது. சில பகுதிகளில் மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.

மீன்வளத்துறையின் எச்சரிக்கையால் தொடர்ந்து 5வது நாளாக மீனவர்கள் இன்றும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. தூத்துக்குடி துறைமுகத்தில் 3 ம் எண் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டது. வேம்பார் முதல் பெரியதாழை வரையிலான கடலோரப் பகுதிகளில் 2,500 க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும், 200 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் கரையிலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.  

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் மழைநீர் வெள்ளம் போல சூழ்ந்துள்ளதால் தண்டவாளங்களும் மழைநீரில் மூழ்கி குளம் போலக் காட்சியளித்தது. இதனால், சென்னையிலிருந்து தூத்துக்குடி வந்த முத்துநகர் விரைவு ரயில் மற்றும் கோவையிலிருந்து தூத்துக்குடி வரும் கோவை லிங்க் விரைவு ரயில் ஆகியவையும்,  தூத்துக்குடி கீழுர் ரயில் நிலையத்திற்கு முந்தைய நிலையமான, மேலூர் ரயில் நிலையத்திலேயே நிறத்தப்பட்டு பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். பின், ரயில் நிலையத்திற்கு வராமல் மீண்டும் மீளவிட்டான் ரயில் நிலையத்திலேயே நிறுத்திவைக்கப்பட்டது.

மழை அவதி

அதேபோல இன்று காலை தூத்துக்குடி ரயில் நிலையத்திலிருந்து 7.30 மணிக்குப் புறப்பட்டுச் செல்ல வேண்டிய குருவாயூர் விரைவு ரயில் 2 மணி நேரம் தாமதமாக 9.30 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது. அதேபோல, தூத்துக்குடியிலிருந்து காலை 8.50 மணிக்குப் புறப்பட்டுச் செல்ல வேண்டிய நெல்லை பயணிகள் ரயில் 2 மணி நேரம் தாமதமாக 10.50 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது. தூத்துக்குடிக்கு வழக்கமாக பிற்பகல் 11.15 மணிக்கு வந்து சேர வேண்டிய மைசூர் விரைவு ரயில், தாமதமாக 12.20 மணிக்கு வந்து சேர்ந்தது. தண்டவாளப் பகுதிகளில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்ட பிறகே ரயில்கள் ரயில் நிலையத்திற்கு வரத் தொடங்கின. மழையால் ரயில் சேவை பாதிக்கப்பட்டதாலும், மேலூர் ரயில் நிலையத்திலேயே இறக்கிவிடப்பட்டதாலும் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க