`பாறையில் மோதிய படகு!’ - நடுக்கடலில் தவிக்கும் 12 மீனவர்கள் | 12 fishermen stranded in Kerala sea as boat damaged

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (14/03/2018)

கடைசி தொடர்பு:21:00 (14/03/2018)

`பாறையில் மோதிய படகு!’ - நடுக்கடலில் தவிக்கும் 12 மீனவர்கள்

மீனவர்கள்

தெற்கு இலங்கை, மாலத்தீவு மற்றும் கன்னியாகுமரிக்கு இடையே இந்தியப் பெருங்கடலில் கடந்த 10ம் தேதி காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. அந்தக் காற்றழுத்த தாழ்வுநிலை அரபிக்கடலை நோக்கி நகர்ந்து தற்போது திருவனந்தபுரத்திலிருந்து 310 கிலோ மீட்டர் தொலைவில் அரபிக்கடலில் மையம் கொண்டிருக்கிறது. இதனால், தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதற்கு முன்பே குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலுக்கு விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றுவிட்டனர். சுமார் 20 நாள்கள் வரை அவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன் பிடிப்பார்கள்.

இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மீனவர்கள் கரை திரும்புமாறு தமிழக அரசு எச்சரித்தது. இதையடுத்து ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் அவசரமாக கரை திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். நேற்றைய நிலவரப்படி 51 விசைப்படகுகள் கரை திரும்பிக்கொண்டிருந்தன. அதில் ஒவ்வொரு படகுகளிலும் 12 முதல் 20 மீனவர்கள் வரை இருக்கிறார்கள். இன்றைய நிலவரப்படி 4 விசைப்படகுகள் லட்சத்தீவு பகுதியில் கரை சேர்ந்திருக்கின்றன. 10 விசைப்படகுகள் கர்நாடக மாநிலம் கர்வார் பகுதியில் கரை திரும்பியிருக்கின்றன. அவசரமாக கரை திரும்பிய ஒரு படகு கர்வார் பகுதியில் பாறையில் மோதி இன்று காலை விபத்துக்குள்ளானது. கேரள மாநிலம் வேப்பூர் பகுதியிலிருந்து மீன்பிடிக்கச்சென்ற நாதபாத்திமா என்ற பெயருடைய அந்தப் படகில், குமரி மாவட்டம் குறும்பனையைச் சேர்ந்த 7 மீனவர்கள், வாணியக்குடியை ஒரு மீனவர் மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த 4 மீனவர்கள் என மொத்தம் 12 மீனவர்கள் இருக்கிறார்கள். பாறையில் மோதி சேதமடைந்த படகில் இருக்கும் 12 மீனவர்களையும் உடனடியாக மீட்க நடவடிக்கை வேண்டும் எனத் தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் சர்ச்சில், அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


[X] Close

[X] Close