வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (14/03/2018)

கடைசி தொடர்பு:21:20 (14/03/2018)

உபயோகமற்ற உலோகங்களால் உருவாகும் கலைநயம் மிக்க சிலைகள்!

வீட்டில் உபயோகமற்ற பித்தளை ஈயம் உள்ளிட்ட உலோகப் பாத்திரங்களை, வெளிமாநிலத்தைச் சேர்ந்த கலைஞர்கள் கலைநயம் மிக்க சுவாமி சிலைகளாக மாற்றி தருகிறார்கள். அவர்களின் கைவண்ணத்தில் மிளிரும் சிலைகளை வாங்க நெல்லை மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். 

சிலைகள் வடிவமைப்பு

தற்போது சில்வர் பொருள்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. முன்பெல்லாம், பொதுமக்களின் பயன்பாட்டில் அதிகமாக இருந்து வந்த பித்தளை, செம்பு, ஈயம் உள்ளிட்ட உலோகப் பாத்திரங்கள், சில்வர் பொருள்களின் வருகைக்கும் பின்னர் குறையத் தொடங்கி விட்டன. இந்த நிலையில், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் கர்நாடகாவைச் சேர்ந்த 5 குடும்பத்தினர் கடந்த சில நாள்களாக முகாமி பழைய பொருள்களை தங்களின் கைவண்ணத்தால் மிளரச் செய்கிறார்கள். 

கைவினைக் கலைஞர்களான அவர்கள், குடும்பத்துடன் தங்கியிருந்து பழங்கால பயன்பாட்டில் இருந்த செம்பு, ஈயப் பொருள்களை .உருக்கி தத்ரூபமான சுவாமி சிலைகள், மிருகங்கள் ஆகிய சிலைகள் வடித்து வருகிறார்கள். கர்நாடகாவைச் சேர்ந்த பசுவையாவும் அவரது குடும்பத்தினரும் செய்யும் பணியைப் பார்க்கும் பொதுமக்கள் தங்களின் வீடுகளில் பயன்படுத்தப்படாமல் கிடக்கும் பாத்திரங்களை எடுத்து வந்து கொடுக்கிறார்கள். அவற்றை சிறிய துண்டுகளாக வெட்டி, அவற்றை சட்டியில் போட்டு உருக்கி தயாராக வைத்திருக்கும் அச்சுக்களின் வார்ப்பில் ஊற்றி 10 நிமிடங்களில் பளபளப்பான சிலைகளாக்கித் தருகிறார்கள். ஒரு சிலை செய்வதற்கு ரூ.50 முதல் ரூ.100 வரை மட்டுமே கூலியாகப் பெற்றுக்கொள்கிறார்கள். 

கண் முன்பாகவே தங்களின் பொருள்களை உருக்க விரும்பும் வகையிலான சிலைகளாக்கிக் கொடுப்பதால் மக்கள் ஆர்வத்துடன் கலைநயம் மிகுந்த சிலைகளை வாங்கிச் செல்கிறார்கள். சிலையை வாங்கிச் சென்ற ராமசாமி என்பவரிடம் பேசியபோது, ’’எனது வீட்டில் பயன்படுத்தப்படாத பழைய ஈயப் பாத்திரம் நீண்டகாலமாக பரணில் கிடந்தது. அதைக் கொண்டு சுவாமி சிலைகள், யானை சிலை ஆகியவற்றைச் செய்யச் சொல்லி வாங்கிச் செல்கிறேன். உபயோகமற்ற பொருளாகக் கிடந்த உலோகங்கள் நம் கண்முன்பாகவே நேர்த்தியான பொருளாக மிளிர்வதைப் பார்க்கவே ஆச்சர்யமாக உள்ளது. 

இந்த பழைய உலோகப் பொருள்களில் ஓட்டை விழுந்து விட்டால், அதனைச் சரிசெய்வதற்கு தற்போது ஆட்கள் கிடையாது. அதனால் வீட்டின் மூலையிலேயே முடங்கிக் கிடக்கிறது. அவற்றை விலைக்கு விற்கச் சென்றாலும் சொற்பத் தொகைக்குக் கேட்கிறார்கள். அதற்குப் பதிலாக பாரம்பர்யமான உலோகத்தைக் கொண்டு நாம் விரும்பும் சிலைகளைச் செய்து வீட்டின் வரவேற்பறையில் வைக்கப் போகிறேன்’’ என்றார். 

கலைநயம் மிக்க சிலைகள்

சிலைகளை வடித்துக்கொடுக்கும் பசுவையாவிடம் பேசியபோது, ’’கைவினைப் பொருள்களைச் செய்வதுதான் எங்களது தொழில். கர்நாடகாவில் தற்போது வேலை இல்லாததால் தமிழகத்துக்கு வந்தோம். நாங்கள் 5 குடும்பத்தினர் இங்கு இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளோம். சிலைகளின் மாடல்கள் எங்களிடம் உள்ளது அதனைப் பார்த்து எந்தச் சிலையைப் போன்று தேவை என்று கேட்கிறார்களோ அதே போல செய்து கொடுக்கிறோம். இந்தத் தொழிலின் மூலமாக ஒரு நாளைக்கு 200 ரூபாய் கூலியாகக் கிடைக்கிறது. சிலைகளை வடிவமைத்துக் கொடுப்பதில் மன நிம்மதியும் கிடைக்கிறது’’ என்றார்கள்.