வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (14/03/2018)

கடைசி தொடர்பு:12:26 (04/07/2018)

சிலுசிலு..குளுகுளு.. அரசுப் பள்ளியில் ஏசி வகுப்பறை! - மகிழ்ச்சியில் மாணவர்கள்    

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகில் உள்ள மேலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குளிர் சாதன வகுப்பறை திறப்பு விழா இன்று  நடைபெற்றது. மாணவ மாணவிகள் முகமெல்லாம் மகிழ்ச்சி பொங்க தங்கள் பள்ளியில் ஏசி வகுப்பறை அமைக்கப்பட்டிருப்பதை நம்பமுடியாமல் பார்த்தார்கள்.

பெங்களூருவைச் சேர்ந்த ஜஸ்டின் அலங்காரம், ப்ரியா ஜஸ்டின் தம்பதிகள் இந்த அரசுப் பள்ளிக்கு இரண்டு ஏசி மெசின்களை நன்கொடையாக வழங்கியிருக்கிறார்கள். இவர்கள் பெங்களூருவில் ஹார்ட்வேர் கடை வைத்திருக்கிறார்கள். தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் ஏசி அமைக்கப்பட்டிருக்கும் அதிசயத்தை பெருமை பொங்க பார்ப்பதற்கென்றே பெற்றோர்கள் திரண்டு வந்திருந்தார்கள். எல்லாருடைய முகத்திலும் ஒருவித பூரிப்பு ஒளிர்ந்துகிடந்தது. 'எங்க புள்ளையும் ஏசி மிசினு வெச்ச ஸ்கூல் படிக்குதுல்ல'என்ற பெருமையும் அதில் வெளிப்பட்டது. வீட்டு விசேஷம் போல இந்த ஏசி வகுப்பறை திறப்புவிழா இன்று நடைபெற்றது.

‎பள்ளி குளிர் சாதன வகுப்பறையைத் திறந்து வைத்து சார் ஆட்சியர் சரயு பேசியதாவது: "இந்தப் பள்ளியில் நூலகம், புரஜெக்டர் ஆகியவை இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இப்போது ஏசி வகுப்பறையும் வந்துவிட்டது. ஒரு தொடக்கப் பள்ளியில் இவ்வளவு வசதிகள் இருப்பது நல்ல தொடக்கம்.மேல்நிலைப்பள்ளிகளில் நிறைய பேர் நன்கொடை வழங்குவார்கள். ஆனால், ஒரு தொடக்கப் பள்ளியிலும் அது சாத்தியம்தான்  என்பதை நிருபித்திருக்கிறது இந்தப் பள்ளி. முன்பெல்லாம் தனியார் பள்ளி விழாக்களுக்குச் செல்வேன். இப்போது செல்வது கிடையாது. அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதே எனது நோக்கம். தனியார் பள்ளி விழாக்களில் மாணவர்கள் நாம் பேசுவதை கூட கவனிக்காமல் நண்பர்களோடு பேசுவார்கள். ஆனால், இங்குள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் அவ்வளவு அமைதியாகவும் ஒழுக்கமாகவும் இருப்பதை பார்க்கும்போது மனம் மகிழ்வாக உள்ளது. பெற்றோர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் அரசுப் பள்ளியை இப்படி உயர்ந்த நிலைக்குக்  கொண்டு செல்ல முடியாது. தனியார் பள்ளிகளுக்கு மாணவர்களை அனுப்பாமல் அரசுப் பள்ளிகளுக்குப் பிள்ளைகளை அனுப்பும் எண்ணத்தை ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் ஏற்படுத்த வேண்டும். நானும் ஓர் அரசுப் பள்ளியில்தான் படித்தேன்
பெற்றோர்களாகிய உங்களுக்கும் நிறைய பொறுப்பு உள்ளது. பள்ளியில் என்ன நடந்தது என்பது குறித்து ஒரு மணி நேரமாவது குழந்தைகளிடம் பெற்றோர்கள் பேசுங்கள். ஆசிரியர் என்ன சொன்னாங்க, நண்பர்கள் என்ன செய்தார்கள் எனக் கேளுங்கள்..படி படி என்று சொல்லாதீங்க..அவர்களிடம் பேசுங்கள் அவர்களுக்கும் நிறைய பிரச்னைகள் இருக்கும். அவர்கள் அதை அம்மாவிடம் அப்பாவிடம் கூறி தீர்வு காண நினைத்திருப்பார்கள். அவர்கள் உங்களைச் சார்ந்து இருப்பார்கள். எனவே, குழந்தைகளிடம் நல்ல நண்பர்களாக இருந்து பேசுங்கள்..ஆசிரியர் சொல்வதை கேட்கச் சொல்லுங்கள். நீங்களும் ரோல் மாடலாக இருங்கள் கண்டிப்பாக நம் குழந்தைகள் நல்ல குழந்தைகளாக வருவார்கள் என்றார்.

இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் கிறிஸ்டி கூறியதாவது, "மேலூரிலிருந்து தனியார் பள்ளி வேன்கள் அதிகமாக வந்து பிள்ளைகளை அழைத்துச் செல்லும் நிலை இருந்தது. இந்நிலை மாற வேண்டும்; நம்ம ஊர் பிள்ளைகள் நம் பள்ளியில் படிக்க வேண்டும் என முடிவு செய்து அனைத்து வசதிகளையும் பள்ளியில் ஏற்படுத்தினேன். மேலும், வெயில் காலம்  மாணவர்கள் கல்வி கற்பதற்கு இடையூறாக இருப்பதை அறிந்தேன். அந்நிலை மாறி மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாடு அடைய முகநூலில் உள்ள நண்பர்கள் மூலம் நன்கொடை பெற்று வகுப்பறையை குளிர்சாதன வகுப்பறையாக மாற்றியுள்ளேன். அரசுப் பள்ளி குறைவானது என்ற எண்ணத்தை மாற்றி அரசுப் பள்ளிதான் உயர்ந்தது என்ற எண்ணத்தை பெற்றோர்களிடம் ஏற்படுத்தி மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்துவதே தனது எண்ணம். குழந்தை நேய கற்றல் முறையில் தற்போது 1 முதல் 3 வகுப்புகளுக்கு ஒரு குளிர்சாதன வகுப்பறையும், 4 முதல் 5 வகுப்புகளுக்கு ஒரு குளிர்சாதன வகுப்பறையாகவும் இந்தப்பள்ளி மாற்றப்பட்டுள்ளது" என்றார்.