`மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை இப்படிச் செயல்படுத்துங்கள்!’ - அரசுக்கு ஆலோசனை சொல்லும் ஓய்வூதியதாரர்கள்

ஓய்வூதியதாரர்கள் போராட்டம்

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்களுக்கும் முழுமருத்துவக் காப்பீட்டுத்திட்டம் கோரியும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கக் கோரியும் சேலம் கலெக்டர் அலுவலத்தின் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டார்கள். இதில் 50-க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்துகொண்டார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாநிலச் செயலாளர் முருகேசன் கூறுகையில், ''தமிழக அரசில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும், யுனைடெட் இந்தியா நிறுவனத்துடன் ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1.7.2014 முதல் செயல்படுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 30.6.2018-ம் தேதியுடன் முடிவடைகிறது.

தமிழ்நாட்டில் 2016 ம் ஆண்டு ஜனவரி மாத நிலவரத்தின்படி 4,78,581 ஓய்வூதியர்களும் 2,31,396 குடும்ப ஓய்வூதியர்களும் இருக்கிறார்கள். 4 ஆண்டு காலத்திற்கு இவர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை தோராயமாக ரூ.455 கோடி ஆகும். இதில் 4 ஆண்டு காலத்திற்கு மருத்துவக் காப்பீட்டிற்காக ரூ.100 கோடி கூட செலவழிக்கப்படுவதில்லை. அரசு இதனை கவனத்தில் கொண்டு இத்திட்டத்தை பயனுடையதாக மாற்றி அமைத்துத் தர வேண்டும். கடந்த ஆண்டுகளில் இத்திட்டம் செயல்படுத்துவதில் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் சிரமங்களை நீக்கிடவும், 1.7.2018 முதல் 30.6.2022 வரை உள்ள காலங்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ஓய்வூதியர்களுக்குச் செயல்படுத்த சில ஆலோசனைகளை அரசுக்கு வழங்குகிறோம்.

 மருத்துவச் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை இரண்டுக்கும் முழுமையான செலவுத்தொகையை காப்பீட்டு நிறுவனம் மருத்துவ மனைக்கு வழங்க வேண்டும். அரசு பொது மருத்துவமனை, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனை ஆகியவற்றில் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அனுமதிப்பது போல ஓய்வூதியர்கள் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலும் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல 4 ஆண்டு காலத்திற்கு ரூ 4 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும். சில சிகிச்சைகளுக்கு அரசே உச்சவரம்பை தளர்த்திச் செலவு முழுவதையும் ஏற்க வேண்டும். மெடிக்கல் அட்டெண்டன்ஸ் சட்டத்தின்படி செலவுத் தொகை முழுவதையும் அரசே காப்பீட்டு நிறுவனமோ வழங்க வேண்டும். செலவுத் தொகை மறுக்கின்ற அதிகாரம் நிறுவனத்திற்கு, அரசுக்கு இருக்கக் கூடாது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மருத்துவக் குழுக்களில் ஓய்வூதியர்கள் சங்கப் பிரதிநிதிகளும் அரசு மருத்துவர்களும் இடம் பெற வேண்டும். இதற்கு மாவட்ட கருவூல அதிகாரி வழி நடத்துபவராக இருக்க வேண்டும். மாதந்தோறும் கூட்டங்களைக் கூட்டி தீர்வு காண வேண்டும்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!