வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (14/03/2018)

கடைசி தொடர்பு:23:00 (14/03/2018)

`இலவச மடிக்கணினி பெற மாணவர்களிடம் கட்டாய வசூல்’ - அரசுப் பள்ளி தலைமையாசிரியர் மீது குற்றச்சாட்டு

தமிழக அரசின் இலவச மடிக்கணினி பெறுவதற்கு மாணவர்களிமிருந்து கட்டாய பண வசூல் செய்ததாக அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மீது புகார் எழுந்திருக்கிறது.  

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே திருவாஞ்சியத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. மாணவர்களின் கல்வி நலன் கருதியும், கம்ப்யூட்டர் அறிவு வளர்ச்சி பெறவும் தமிழக அரசு இலவச மடிக்கணினிகளை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. அதன்படி 2017-18 ஆண்டுக்குரிய 70 மாணவர்களுக்கு திருவாஞ்சியம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ராஜேந்திரன் மடிக்கணினி  வழங்கியிருக்கிறார்.  

தலைமையாசிரியர் இராஜேந்திரன்

அப்போது, ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் அறிவுறுத்தலின்படி பள்ளிக் கல்வி வளர்ச்சி நிதி என்ற பெயரில் தலா ரூ.200 வசூலித்திருக்கிறார். இதுபற்றி புகார் எழவே பள்ளியின் தலைமையாசிரியர் ராஜேந்திரனிடம் விளக்கம் கேட்டோம். ``பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் அறிவுறுத்தலின்படி பள்ளி கல்வி வளர்ச்சி நிதிக்காக, மடிக்கணினி பெறும் ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் தலா ரூ.200 பெற்றது உண்மைதான். அந்தப் பணத்தில் ஒரு பைசாகூட நான் தொடவில்லை. பள்ளிக் கல்வி வளர்ச்சி நிதிக் கணக்கில் செலுத்திவிட்டேன்’ என்றார்.  

தலைமையாசிரியரின் இந்த விளக்கத்தை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பழனிவேலு மறுக்கிறார்.  அவரிடம் பேசியபோது, ``நாங்கள் நன்கொடை பெறுவதற்கு ரசீது புத்தகம் வைத்துள்ளோம். தலைமையாசிரியர் மாணவர்களிடம் வசூலித்த பணத்திற்காக, யாருக்காவது ரசீது கொடுத்துள்ளாரா?. உண்மை என்னவென்றால், எங்களைக் கேட்காமல் தன்னிச்சையாகப் பணம் வசூல் செய்து, பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு அவமானத்தை தேடித் தந்திருக்கிறார். ஏழை மாணவர்களுக்கு மடிக்கணினி  கொடுப்பதற்கு ரூ.200 லஞ்சம் பெற்றதற்காக தலைமையாசிரியர் ராஜேந்திரன் மீது கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று முடித்தார்.  
  

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க