வானொலி பார்த்திடாத மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்திய அரசு உதவிபெறும் பள்ளி!

கிராமப்புற மற்றும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் தனித்திறமைகளை ஊக்குவித்து அதை வெளிப்படுத்த களம் அமைத்து கொடுப்பதை வழக்கமாகச் செய்து வருகிறார் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் சொக்கலிங்கம். 

வானொலிப்பெட்டி

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஏழை எளிய மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில், வழக்கமான கல்வித்துறையின் பாடங்களை போதிப்பதோடு மாணவ மாணவிகளின் பல்வேறு திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் தினசரி ஒரு நிகழ்ச்சி என்ற அடிப்படையில் அவர்களுக்குப் பல்வேறு விஷயங்களைப் பயிற்றுவித்து வருகிறார்கள்.

தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம், சக ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு மாணவரையும் தன்னம்பிக்கையுடனும், ஐ.க்யூ அதிகமுள்ளவர்களாகவும் மாற்றி வருகிறார். அனைத்துச் சிறுவர் மற்றும் அறிவியல் இதழ்களை வாசிக்க வைக்கிறார்கள். இதழ்களில் வரும் போட்டிகளில் கலந்துகொண்டு இப்பள்ளி மாணவர்கள் பரிசுகளைக் குவிக்கிறார்கள். இது மட்டுமல்லாமல், பொது அறிவு, கலை, பண்பாட்டுப் போட்டிகள் எங்கு நடந்தாலும் அதில் இப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெறுகிறார்கள். வெளியூர் செல்வதற்கான செலவுகளைப் பள்ளி நிர்வாகமே ஏற்றுக்கொள்கிறார்கள். உள்ளூர் அதிகாரிகள், பிரபலங்கள் முதல் வெளிமாநில, வெளிநாட்டு நிபுணர்கள், பிரபலங்களைப் பள்ளிக்கு அழைத்து அவர்களை மாணவர்களுடன் கலந்துரையாட செய்கிறார்கள். தனியார் பள்ளிகளில் கிடைக்காத வாய்ப்புகளை கூட இப்பள்ளி மாணவர்கள் அடைகிறார்கள். 

வானொலி

இந்த நிலையில், வானொலி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மதுரை ஆல் இந்திய ரேடியோ நிலையத்துக்கு இப்பள்ளி மாணவர்கள் நேற்று வந்திருந்தனர். இதற்காக தனி பேருந்து அமர்த்தி பிள்ளைகளின் பெற்றோர்களையும் அழைத்து வந்திருந்தனர். நம்மிடம் பேசிய தலைமையாசிரியர் சொக்கலிங்கம் ''வானொலிப்பெட்டிகளை இப்போதுள்ள தலைமுறையினர் மறந்துவிட்டார்கள். ஆனால், வானொலி கேட்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள். ஆல் இந்திய ரேடியோவின் சிறுவர் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு எங்கள் பள்ளிக்கு வாய்ப்பு கிடைத்தது. ஏற்கெனவே பல நிகழ்ச்சிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வரும் எங்கள் மாணவர்கள் இதிலும் சிறப்பாகப் பங்கேற்றார்கள். இதில் பலபேருக்கு வானொலி நிலையத்துக்கு மட்டுமல்ல, மதுரைக்கு வருவதும் இதுவே முதல்முறை. அவர்களோடு அவர்களின் பெற்றோர்களையும் அழைத்து வந்துவிட்டோம். இன்னும் பல விஷயங்களை அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்ய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்'' என்றார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!