வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (15/03/2018)

கடைசி தொடர்பு:00:00 (15/03/2018)

`சாக்கடையில் அடித்துவரப்பட்ட குழந்தையின் உடல்!’ - திருச்செந்தூரில் நடந்த சோகம்

 திருச்செந்துாரில் உள்ள உப்பாற்று ஓடையில் அழுகிய நிலையில் 3 வயது மதிக்கத்தக்க ஆண்குழந்தையின் உடல் ஒதுங்கியுள்ளது. இச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சாக்கடையில் அடித்து வரப்பட்ட குழந்தை உடல்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலிருந்து வீரபாண்டியன்பட்டிணம் செல்லும் சாலையில் உள்ள ரயில் நிலைய பாலம் அருகில் உப்பாற்று ஓடை ஒன்று உள்ளது. இந்த ஓடையில் இன்று மதியம் 1 மணியளவில் 3 வயது மதிக்கத்தக்க கறுப்புநிற டீ-சர்ட் மற்றும் பிரவுன் நிற டவுசர் அணிந்த ஆண்குழந்தையின் உடல் குப்புறப் படுத்த நிலையில் அழுகிய நிலையில் கரை ஒதுங்கிக் கிடந்தது. இதைப் பார்த்த அப்பகுதியினர் போலீஸாருக்குத் தகவல் கூறினர்.

குழந்தையின் உடல் கைப்பற்றப்பட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. குழந்தையின் வயிற்றுப்பகுதி ஊதி, அழுகிய நிலையில் இருந்ததால் இறந்து ஒருவாரம் ஆகியிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். ஓடைத் தண்ணீரில் மிதந்து வந்த குழந்தையின் உடலை நாய் கரைக்கு இழுந்து வந்திருக்கலாம் என ஊர்க்காரர்களும் கருத்தைக் கூறினர்.

குழந்தையின் முகம் முழுவதுமாக சிதைந்த நிலையில் இருப்பதால், குழந்தையை அடையாளம் கண்டுபிடிப்பதில் சிக்கல் உள்ளது. திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை கடத்தப்பட்டு செயின், மோதிரத்திற்காக கொலை செய்து வீசப்பட்டதா அல்லது வேறு எங்காவது கொலை செய்யப்பட்டு வீசப்பட்டதா அல்லது ஓடையில் தவறி விழுந்து இறந்து மிதந்து இங்கு ஓடைத் தண்ணீரில் அடித்து வரப்பட்டாதா என்பது மர்மமாக உள்ளது. இச்சம்பவம் குறித்து திருச்செந்துார் தாலுகா போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அழுகிய நிலையில் குழந்தையின் உடல் கிடந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க