வெளியிடப்பட்ட நேரம்: 21:52 (14/03/2018)

கடைசி தொடர்பு:21:52 (14/03/2018)

``ஸ்டீஃபன் ஹாக்கிங்கைப் பார்க்கமுடியாமல் போய்விட்டதே!” - தமிழ் மொழிபெயர்ப்பாளர் வேதனை!

ஸ்டீஃபன் ஹாக்கிங்

இயற்பியல் விஞ்ஞானியும் பிரபஞ்சம் பற்றிய புதிய புதிய கருதுகோள்களை முன்வைத்தவருமான மறைந்த ஸ்டீஃபன் ஹாக்கிங் எழுதிய நூல்கள், தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 

ஹாக்கிங் எழுதிய (A Brief History of Time) என்ற நூலானது, 2002-ல் உலகத் தமிழ்மொழி அறக்கட்டளையால் தமிழில் ‘காலம்- ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ எனும் தலைப்பில் முதலில் வெளியிடப்பட்டது. அவரைப் பற்றிய ’Stephen Hawking: An Unfettered Mind’ நூலை, எதிர் வெளியீடு, தமிழில் ‘ஸ்டீஃபன் ஹாக்கிங் - வாழ்வும் பணியும்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. 

’காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ மொழிபெயர்ப்பாளர் நலங்கிள்ளியிடம் பேசினோம். ``இளநிலை தாவரவியல் படித்த எனக்கு, இயற்பியல் மீது தாகம் உண்டு. என்னுடைய 23 ஆவது வயதில் A Brief History of Time புத்தகத்தைப் படித்தேன். இப்படியும் ஒருவர் அறிவியலை, இயற்பியலை சுவையாகச் சொல்லமுடியுமா என வியந்திருக்கிறேன். தமிழ்வழிக் கல்விக்கு ஆதரவாளனான எனக்கு, இந்தப் புத்தகத்தைத் தமிழில் கொண்டுவரவேண்டும் என நிறைய பேரிடம் கேட்டிருக்கிறேன்; இல்லை, புலம்பியிருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு கட்டத்தில் நானே செய்யலாம் என முடிவெடுத்தேன். 2001-ல் தொடங்கி, ஓராண்டில் மொழிபெயர்ப்பை முடித்தேன். அவருடன் இணையத்தின் மூலம் தொடர்பு இருந்தது. நான் மொழிபெயர்த்தது பற்றி அவருக்குத் தெரியும். அவரைச் சந்திக்க வேண்டும் என ஏங்கியிருக்கிறேன். அதற்கு இனி வாய்ப்பே இல்லை என்கிறபடி அவரின் இறப்புச்செய்தி இடியாக வந்திறங்கியது. மிகவும் வருத்தமாக இருக்கிறது” என்றார் நலங்கிள்ளி. 

கிட்டி ஃபெர்கூசன் எழுதிய `Stephen Hawking: An Unfettered Mind’ நூலை மொழிபெயர்த்த பேராசிரியர் ச.வின்சென்ட்டிடம் கேட்டபோது, ” பிரபஞ்சத்தைப் பற்றி ஸ்டீஃபன் ஹாக்கிங் சொன்னது பாதியும்,  அவரின் வாழ்க்கையைப் பற்றி மீதமுமாக இந்தப் புத்தகம், எழுதப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு இயற்பியலைப் புரியவைப்பதற்காக ஹாக்கிங், தன் மகளுடன் சேர்ந்து கட்டுரைகள், புத்தகங்கள் என நிறைய எழுதியுள்ளார். அதைப் பற்றியும் இந்தப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. முதல் மனைவியுடனான காதல், பிரிவு பற்றியும் ஒளிவுமறைவின்றி ஹாக்கிங் சொல்லியிருக்கிறார். இதனால்தான் இதை தமிழில் மொழிபெயர்க்கத் தோன்றியது” என்றார், பேரா. ச. வின்சென்ட். ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் மற்ற புத்தகங்களும் தமிழுக்கு வரவர, அவரின் அறிவியல் பார்வை, தமிழ்ப் பரப்புக்கு எளிதாகக் கிடைக்கும் என்பது உறுதி!