வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (15/03/2018)

கடைசி தொடர்பு:14:37 (03/07/2018)

`வருமான வரி படிவத்தின் இ-ஃபைலிங் செய்ய மார்ச் 31 கடைசி தேதி!’ கலெக்டர் தகவல்!

"வரும் மார்ச் 31-க்குள் வருமான வரி படிவத்தினை இ-ஃபைலிங் செய்திட வேண்டும்" என வருமான வரி தொடர்பான விழிப்புணர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

 

கரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வருமான வரி படிவத்தினை இ-ஃபைலிங் செய்வது குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் த.அன்பழகன் தலைமையில் இன்று (14.03.2018) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பேசுகையில்,"வருமான வரி செலுத்துபவர்கள் செலுத்து படிவத்தை வழங்கிவிட்டு உடனடியாக ஆன்லைன் மூலம் இ-ஃபைலிங் அவசியம் பதிவு செய்திட வேண்டும். இதனால்,வருமான வரி சட்டத்தின்படி நேர்மையான வாரி செலுத்துபவராக உருவாகிடலாம். வருமான வரி சட்டத்தின் கீழ் அபராதம் மற்றும் வழக்கு ஆகியவற்றிலிருந்து விடுபடலாம். வணிகம் மற்றும் தொழில் சார்ந்த மூலதன இழப்புகளை அடுத்து வரும் ஆண்டுகளுக்கு கொண்டு செல்ல இயலும். வங்கி கடனை நாடும் போது நிதிநிலைக்கு ஒரு நல்ல ஆதாரமாக அமையும்.
இ-ஃபைலிங்கில் பதிவு செய்ய `incometaxindiaefiling.gov.in’ என்ற இணையதளத்தில் விண்ணப்பிப்பவரது பெயர், பான் கார்டு, பிறந்த தேதி, மொபைல் எண் மற்றும் இ-மெயில் முகவரிகளை பதிவு செய்து உங்களுக்கான ரகசிய எண்ணை (password) உருவாக்கி பதிவு செய்திடலாம். 2016-2017 மற்றும் 2017-2018ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி படிவம் பதிவு செய்ய 31.03.2018 கடைசி நாளாகும். இந்த கடைசி நாளுக்குள் இ-ஃபைலிங்கில் பதிவு செய்து பயன்பெற வேண்டும்" என்றார்.