வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (15/03/2018)

கடைசி தொடர்பு:01:30 (15/03/2018)

`ஊருணியில் மூழ்கி உயிரிழந்த 10-ம் வகுப்பு மாணவன்!’ - ராமநாதபுரம் அருகே சோகம்

ராமநாதபுரம் அருகேயுள்ள இடையர்வலசை கிராமத்திலிருந்த ஊருணியில் குளிக்கச் சென்ற 10-ம் வகுப்பு மாணவன், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது  தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் அருகே ஊரணியில் மூழ்கி பலியான மாணவன் பாலாஜி

ராமநாதபுரம் காட்டுப்பிள்ளையார் கோயில் தெருவில் வசித்து வரும் கார்த்திகைராஜின் மகன் பாலாஜி(14). தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வினை எழுத இருந்தார். இந்நிலையில் ராமநாதபுரம அருகே இடையர்வலசையில் உள்ள தனது மாமா மங்களேசுவரன் வீட்டுக்கு பள்ளி விடுமுறை என்பதால் அவர் சென்றிருந்தார். 

இடையர் வலசையில் உள்ள ஊருணியில் குளிக்கச் சென்ற பாலாஜி, சகதியில் சிக்கித் தவித்துள்ளார். இதனைக்கண்ட அப்பகுதியில் இருந்த பொதுமக்கள், அவரை மீட்க முயன்றுள்ளனர். ஆனால், பாலாஜி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் அப்பகுதியை சேர்ந்த மக்களின் உதவியுடன் பாலாஜியின் உடலை ஊருணியில் இருந்து மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் பஜார் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு பொதுத் தேர்வினை எழுத இருந்த மாணவன் பாலாஜி ஊருணியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்களையும், காட்டுப்பிள்ளையார் கோயில் பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.