வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (15/03/2018)

கடைசி தொடர்பு:02:00 (15/03/2018)

`விழுப்புரம் தாக்குதலில் காயமடைந்த தனம் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டார்!’ - ஜிப்மர் மருத்துவர்கள் தகவல்

விழுப்புரம் மாவட்டம் ஆராயியின் மகளான சிறுமி தனம், அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

ஆராயி மற்றும் தனம்

விழுப்புரம் மாவட்டம் வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆராயி. கடந்த 21-ம் தேதி இரவு தனது 10 வயது மகன் சமயன் மற்றும் 14 வயது மகள் தனத்துடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த சில மர்ம நபர்கள் மூன்று பேரையும் கொடூரமாகத் தாக்கியதோடு 10 வயது சிறுவன் சமயனையும் கொன்றது. அதேபோல சிறுமி தனத்தையும் பாலியல் வன்கொடுமை செய்தது. ஆராயி மற்றும் அவரது மகள் தனம் இருவருக்கும் இந்தத் தாக்குதலால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சுயநினைவின்றி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

தீவிர சிகிச்சையளித்தும் இருவருக்கும் சுயநினைவு திரும்பாத நிலையில், அதிதீவிரப்  பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், 5 நாட்களுக்கு முன்பு தனம் உடல்நிலையில் ஓரளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டது. தற்போது எழுந்து உட்கார்ந்து ஓரிரு வார்த்தைகள் பேசுமளவிற்கு அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. சுயநினைவு திரும்பியதோடு உடல்நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால் அவர் அபாயக் கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல தனம் சிகிச்சைப் பெற்று வரும் வார்டிலேயே அவரது தாய் ஆராயியும் சிகிச்சைப் பெற்று வருகிறார். ஆனால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் இன்னும் சுயநினைவு திரும்பவில்லை. நினைவு திரும்பிய தனத்திடம் போலீஸ் வாக்குமூலம் பெற முயற்சி செய்து வருகிறார்கள்.