வெளியிடப்பட்ட நேரம்: 03:23 (15/03/2018)

கடைசி தொடர்பு:03:23 (15/03/2018)

திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் பகேர்லா செபாஸ் கல்யாண் மாற்றம்..!

கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் எட்டி உதைத்ததில் உயிரிழந்த உஷா விவகாரம் பூதாகரமாகி வருகிறது. இந்நிலையில் திருச்சி எஸ்.பி பகேர்லா செபாஸ் கல்யாண், சென்னை குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் அந்த இடத்துக்கு சேலம் அமலாக்கத்துறை எஸ்.பி.ஸியால் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பணியிட மாற்ற உத்தரவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, பத்திரிக்கையாளர்களிடம் எஸ்.பி பகேர்லா செபாஸ் கல்யாண், ”உஷாவின் பிரேத பரிசோதனையில், அவர் இறக்கும்போது கர்ப்பமாக இல்லை. ஒருவேளை உஷா, கர்ப்பமாகவே இருந்திருந்தாலும் அதனால் வழக்கு விசாரணையிலோ, பிரிவுகளிலோ எந்த மாற்றமும் வந்துவிடப்போவதில்லை. விசாரணை தொய்வில்லாமல் நடக்கிறது” என்றார். இந்தச் செய்தி தமிழகம் முழுவதும் வைரல் ஆனது. அதுவே உஷா விவகாரத்தில் குற்றஞ்சாட்டுக்குள்ளான போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஆதரவாக அரசு செயல்படுகிறது என்கிற பேச்சை எழுப்பியுள்ளது. திருச்சி எஸ்.பி செபாஸ் கல்யாண்ஆனால் அடுத்த சில தினங்களில், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான டி.எஸ்.பி புகழேந்தி, இன்னும் சில தினங்களில் மற்றொரு பரிசோதனை அறிக்கை கிடைக்கும். அந்த அறிக்கையின் படிதான் உஷாவின் உடல்நிலை குறித்து உண்மை தெரியவரும்” எனக் கூறியிருந்தார்.

இப்படியான சூழலில், பலியான உஷாவின் மரணத்துக்காக நீதிக்கேட்டு நடந்த சாலைமறியல் கலவரமானதில், பொது சொத்துக்களை சேதம் விளைவித்ததாக கைது செய்யப்பட்ட 27 பேர் மீதான ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே, கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கவேண்டும் என்றும், அவர்கள் மீதான ஜாமீன் மனுவில் போலீஸ் சார்பில் அழுத்தம் தரக்கூடாது என மக்கள் அதிகாரம், புதிய தமிழகம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் எஸ்.பி பகேர்லா செபாஸ் கல்யாண், திருச்சி மாநகர காவல் ஆணையர் ஆகியோரைச் சந்தித்து கோரிக்கை வைத்திருந்தனர்.

அதன்படி 27 பேர் மீதான ஜாமீன் மனு நேற்று காலை விசாரணைக்கு வந்தது. வழக்கில் விசாரணை நடந்து முடியும்வரை போலீஸ் ஆட்சேபனை தெரிவிப்பார்களோ என்கிற பதற்றம் நிலவியது. இறுதியாக நேற்று காலை திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி குமரகுரு, 27 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதனையடுத்து உஷாவின் கணவர் ராஜா, 27 பேரின் ஜாமீன் மனுவுக்காக ஆஜராகி வாதிட்ட, திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க தலைவர் பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து நன்றி கூறினார்.

இப்படியிருக்கும் சூழலில்தான். திருச்சி எஸ்.பி பகேர்லா செபாஸ் கல்யாண், இடமாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்தச் செய்தியை மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸார், சமூக ஆர்வலர்கள் பரபரப்பாக பகிர்ந்துக்கொண்டு வருகின்றனர். எஸ்.பி மாற்றப்பட்டதற்கு திருச்சி போலீஸார் இடையே பல காரணங்கள் உலாவருகின்றன.

திருச்சி எஸ்.பி பகேர்லா செபாஸ் கல்யாண், திருச்சி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டதில் இருந்தே, திருச்சி போலீஸாரை கடுமையாக வேலை வாங்க ஆரம்பித்தார். அதனால் பல போலீஸார் இவர் மீது கடுப்பில் இருந்தார்கள். அதேவேளையில் இவர் சில விசயங்களை கண்டுக்கொள்ளவில்லை என்கிற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன. கடந்த வாரம் சென்னையில் நடந்த மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி மாநாட்டில் கலந்துக்கொண்ட எஸ்.பி கல்யாண், கலவரம் நடந்த அன்று விடுப்பில் இருந்தார். அன்று திருச்சி டி.சி சக்திகணேஷ் மற்றும் கமிஷனர் அமல்ராஜ் ஆகியோர் களத்தில் இருந்தார்கள். மேலும் அவர்கள், கலவரக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தவும், கைது செய்யப்பட்டவர்கள், விடுதலை செய்ய போராட்டக்காரர்களுக்கு உறுதியளித்தது இவர்கள்தான். ஆனால் அதன்பிறகு அவர்கள் அப்படியே ஒதுங்கிக்கொண்டனர்.

உஷா உயிரிழந்த விவகாரத்தில் அனைத்தும் போலீஸாருக்கு எதிராக இருந்ததால் பொதுமக்களிடையே பெரிய எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் உஷா கர்ப்பமில்லை என அறிக்கையை பகேர்லா செபாஸ் கல்யாண் வெளிப்படையாக கூறினாலும் அதனை பொதுமக்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இந்தச் சூழலில்தான் எஸ்.பி மாற்றப்பட்டுள்ளார்.

ஆனால் திருச்சி போலீஸாரோ, இதுவழக்கமான டிரான்ஸ்பர்தான். இந்த டிரான்ஸ்பர், கலெக்டர்கள் மாநாட்டுக்கு முன்பாகவே நடக்க வேண்டியது. மாநாடு முடிந்ததும் உஷா விவகாரம் பூதாகரமாகிவிட்டது. அவற்றுடன் இந்த டிரான்ஸ்பரை தொடர்புப்படுத்த வேண்டாம். இன்னும் சில மாவட்ட எஸ்.பிக்கள், கலெக்டர்கள் மாற்றம் விரைவில் நடக்க வாய்ப்புள்ளது” என்றார்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க