வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (15/03/2018)

கடைசி தொடர்பு:10:26 (15/03/2018)

கின்னஸ் சாதனை படைக்கும் குடும்பத்தினர்..! ராமநாதபுரத்தில் அசத்தல் முயற்சி

736 வகையான தேநீர் கப்புகளைச் சேகரித்ததன்மூலம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளைஞர் சங்கரநாராயணன் 2-வது முறையாக கின்னஸ் சாதனையாளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

இரண்டாம் முறையாக கின்னஸ் சாதனை படைத்த சங்கரநாராயணன்

ராமநாதபுரம் வெளிப்பட்டினம் அருள்மிகு முத்துராமலிங்கசுவாமி கோயில் தெருவில் வசித்துவருபவர், முதுநிலைப் பொறியியல் பட்டதாரி வெ.சங்கரநாராயணன். இவர், கடந்த 2017 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி, வெவ்வேறு டிசைன்களில் 736 தேநீர்க் கப்புகளைச் சேகரித்து, அவற்றைப் பொதுமக்கள் முன்னிலையில் காட்சிப்படுத்தினார். மேலும், சங்கரநாராயணன் இந்தச் சாதனை முயற்சியை லண்டனில் உள்ள கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற விண்ணப்பித்திருந்தார். பல்வேறு வகையான தேனீர்க் கப்புகளைச் சேகரித்த இவரது சாதனையை அங்கீகரித்த கின்னஸ் நிறுவனம், தனது சாதனைப் புத்தகத்தில் சங்கரநாராயணனின் சாதனையைப் பதிவுசெய்தது. இதற்கான சான்றிதழ், கடந்த இரு தினங்களுக்கு முன் கின்னஸ் நிறுவனத்தால் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. 

ஏற்கனவே கின்னஸ் சாதனையாக கடந்த 2008 -ம் ஆண்டு ஒரே நேரத்தில் ஒரே மூச்சில் 151 மெழுகுவர்த்திகளை வாயினால் ஊதி அணைத்து சாதனை செய்தார். பொதுமக்கள் முன்பாக செய்து காட்டிய இச்சாதனையையும் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது. கின்னஸ் சாதனை நிகழ்த்தி இருமுறை சான்றிதழ் பெற்ற பட்டதாரி வாலிபர் சங்கரநாராயணனை பொதுமக்கள் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். 

இரு முறை கின்னஸ் சாதனை புரிந்த சங்கரநாராயணனின் சகோதரரான சுந்தரம் கடந்த 2009 ஆம் ஆண்டு வாயில் 398 சர்பத் உறிஞ்சும் ஸ்டிராக்களை தினித்து சாதனை புரிந்தமைக்காகவும், இவரது சகோதரி ரமா கடந்த 2010 ஆம் ஆண்டு தலையில் மாட்டிக் கொள்ளும் ஹேர் கிளிப்புகளை அதிக அளவில் சேகரித்தமைக்காகவும் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.