வெளியிடப்பட்ட நேரம்: 06:33 (15/03/2018)

கடைசி தொடர்பு:10:20 (15/03/2018)

“எங்களுக்குத் தெரியாத ஹைடெக்கா!” - டென்ஷனான தமிழிசை

தமிழிசை

''தமிழகத்தில் அடுத்து எந்தத் தேர்தல் வந்தாலும், பா.ஜ.க-வின் துணையில்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது'' என ஈரோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பேசினார்.

ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ.க பூத் கமிட்டிப் பொறுப்பாளர்கள் கூட்டம், அங்குள்ள ஒரு தனியார் ஓட்டலில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், “தமிழகத்தில் பா.ஜ.க பலவீனமாக இருக்கிறது என்று பலர் சொல்லிவருகின்றனர். ஆனால், நாம் பலவீனமாக இருக்கிறோம் என்று நீங்களே நினைத்து வேலைசெய்யாமல் முடங்கிவிடக் கூடாது. இந்தியாவில், ஜனநாயக முறைப்படி ஆட்சிசெய்யும் ஒரே கட்சி பா.ஜ.க-தான். காங்கிரஸ் காலத்தில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழல்களால்தான் மக்கள் நம்மிடம் ஆட்சியைக் கொடுத்தார்கள். மக்களின் நம்பிக்கையைப் பொய்யாக்காமல், பல திட்டங்களை நாம் தொடர்ந்து செய்துவருகிறோம். திரிபுராவில் உள்ள 60 சீட்டில், இதற்கு முன்பு வரை நாம் டெப்பாசிட் கூட வாங்கியது கிடையாது. ஆனால், இன்றைக்கு அங்கு நாம் ஆட்சியைப் பிடித்திருக்கிறோம். அதே நிலைமைதான் நாளை தமிழ்நாட்டிலும் வரும்” என்றார்.

தமிழிசை

இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழிசை செளந்தரராஜன், “தமிழத்தில் ஒரு நாகரிகமான அரசியலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் பா.ஜ.க-வினுடைய கருத்து. இன்றைய சூழ்நிலையில், வளர்ச்சிக்கான, ஊழலற்ற, நேர்மையான அரசியலைக் கொடுக்கும் தகுதி பா.ஜ.க-வுக்குத்தான் இருக்கிறது. புதிதாக வருபவர்கள், நான் மக்களுக்கு அதைச் செய்வேன், இதைச் செய்வேன் எனச் சொல்வார்கள். ஆனால், அவர்களால் ஒன்றுமே செய்யமுடியாது. டி.டி.வி.தினகரன் கட்சி ஆரம்பிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். சிறையிலிருப்பவர்கள் படத்தையெல்லாம் போட்டுவிட்டு தமிழகம் தலை நிமிர கட்சி ஆரம்பிக்கிறேன் என்று சொல்கிறார் என்ன ஞாயம் இது?' என்றார். 

தமிழிசை

தொடர்ந்து பேசியவர், “கமல்ஹாசன் கட்சியிலிருந்து, தங்களை உறுப்பினராகச் சேர்த்திருக்கிறோம் என்ற தகவல் எனக்கு வந்தது. நான் ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர். நான் எதற்காக அவர்களுடைய கட்சியில் இணையப்போகிறேன். அதற்கு அவர்கள் ஒரு விளக்கம் வேறு கொடுத்திருக்கிறார்கள். ‘தவறு நடந்திருக்கிறது, அதைப் பார்க்கிறேன்’ என்று ஒரு தலைவர் சொன்னால், அது ஆரோக்கியமான சூழ்நிலை என எடுத்திருப்பேன். ஆனால், நீங்கதான் அப்ளை செஞ்சீங்கன்னு தொடர்ந்து சொன்னா என்ன அர்த்தம்? இப்ப உள்ள தொழில்நுட்பத்தில், அவங்க என்ன வேணும்னாலும் ஏமாத்து வேலை செய்யலாம். அதிகாரபூர்வமாக எனது மின் அஞ்சலில், உங்களுடைய உறுப்பினர் எண் வந்திருக்கிறது. முதலில் தவறை ஒப்புக் கொள்ளுங்கள். இனிமேல் இதுபோன்ற ஏமாற்றுவேலைகளை செய்யாதீர்கள். எங்களுக்குத் தெரியாத ஹைடெக்கா!” என கோபமானார். 

தொடர்ந்தவர், “அமைப்பு ரீதியாக கட்சியைப் பலப்படுத்த 18 மாவட்டங்களில் பயணத்தை முடித்திருக்கிறேன். தமிழகத்தைப் பொறுத்தமட்டில், ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு பா.ஜ.க-வால்தான் முடியும். தமிழகத்தில் அடுத்து எந்தத் தேர்தல் வந்தாலும், பா.ஜ.க-வின் துணையில்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது என்ற சூழ்நிலையை நாங்கள் உருவாக்கிவருகிறோம். ஏதோ பா.ஜ.க பலவீனமாகத்தானே இருக்கு; நோட்டாவுக்குக் கீழதானே ஓட்டு வாங்கிட்டு இருக்காங்கன்னு நினைக்காதீங்க. நாங்க நோட்டு கொடுத்து ஓட்டு வாங்கலை. அதனால, நோட்டாவுக்குக் கீழ இருக்கிறதை நினைச்சு நாங்க வருத்தப்படலை. நிச்சயமாக இந்தத் தடவை பா.ஜ.க மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றார்.