வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (15/03/2018)

கடைசி தொடர்பு:08:23 (15/03/2018)

பாஸ்போர்ட் தொடர்பாக இரோம் சர்மிளா..! உயர் நீதிமன்றம் உத்தரவு

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நாவின் மனித உரிமைக்கான கருத்தரங்கிற்குச் செல்ல பாஸ்போர்ட் வழங்கக் கோரி இரோம் சர்மிளா தொடர்ந்த வழக்கில், மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பதில் மனு தாக்கல்செய்ய, மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மணிப்பூர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில், பழங்குடியின மக்களுக்கு எதிராக ஆயுதமேந்திய படைகள் மற்றும் அரசு இயந்திரங்களால் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்களுக்கு எதிராகப் போராடிய  சமூக ஆர்வலர் மற்றும் மனித நல ஆர்வலர், இரோம் சர்மிளா. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "பிப்ரவரி 26 முதல் ஐ.நா.சபையின் மனித உரிமைக்கான 37-வது கருத்தரங்கு ஜெனிவாவில் நடைபெற்றுவருகிறது.

அதில், இலங்கையில் சிறுபான்மையினராக உள்ள தமிழர்கள் மற்றும் குழந்தைகள்மீது நடத்தப்பட்ட, நடத்தப்படும் வன்முறைகள்குறித்து மார்ச் 23-ல் பேசுவதற்காக அழைக்கப்பட்டுள்ளேன். அதில் கலந்துகொள்ள பாஸ்போர்ட் அவசியம். என்மீது எந்த குற்றவியல் வழக்குகளும் இல்லாத நிலையில், பாஸ்போர்ட் வழங்க மறுக்கின்றனர். ஆகவே, எனக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும்" என்றுகூறியிருந்தார். இந்த வழக்கை விசரித்த நீதிபதி ராஜமாணிக்கம், இது தொடர்பாக மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பதில்மனு தாக்கல்செய்ய உத்தரவிட்டு, வழக்கை மார்ச் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.