வெளியிடப்பட்ட நேரம்: 04:56 (15/03/2018)

கடைசி தொடர்பு:08:07 (15/03/2018)

தொடர் மழையால் அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கிய சோகம்!

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக, கதிர் முற்றி அறுவடை செய்வதற்குத் தயாரான நிலையில் இருந்த நெற்பயிர்கள், மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையில் தவித்துவருகிறார்கள்.

மூழ்கிய நெற்பயிர்கள்

இந்தியப் பெருங்கடலில் மையம்கொண்ட குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக, நெல்லை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்துவருகிறது. நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்வதால், நீர் நிலைகளுக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நெல்லை மாவட்டத்தில், அதிகபட்சமாக பாபநாசம் பகுதியில் 19 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

இந்த மழையின் காரணமாக, மானாவாரி விவசாயிகளும் கிணற்றுப் பாசன விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் பயிர் செய்த பயறு வகைகள், நிலக்கடலை, கிழங்கு வகைகள், மிளகாய், வாழை உள்ளிட்டவற்றுக்கு இந்த மழை உபயோகமாக இருக்கிறது. அதேசமயம், நெல் பயிரிட்ட விவசாயிகள் இந்த மழையின் காரணமாக பெரும் பாதிப்பைச் சந்தித்துவருகிறார்கள். பிசான சாகுபடியில் பயிரிடப்பட்ட நெல், தற்போது கதிர் முற்றிய நிலையில் அறுவடைக்குத் தயாராக உள்ளது. இந்தச் சூழலில், மழை பெய்ததால் கதிர்கள் தலை சாய்ந்து தண்ணீரில் மூழ்கிக்கிடக்கின்றன. இது, விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து பாலாமடையைச் சேர்ந்த விவசாயி சக்திவேல் கூறுகையில், ''மழை பெய்வது எப்போதுமே விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும். ஆனால், தற்போது நெல் பயிர்கள் கதிர் முற்றி அறுவடைக்குத் தயாரான நிலையில், மழை பெய்ததால் தண்ணீரில் கதிர்கள் மூழ்கிவிட்டன. தண்ணீரை வடிக்க முடியாதபடி வாய்க்கால்களிலும் நீர் தேங்கி நிற்கிறது. அதனால் முற்றிய பயிர்களை இயந்திரம்மூலம் அறுவடைசெய்ய முடியாத நிலைமை உள்ளது.

கனமழையால் பாதிப்பு

தண்ணீரில் மூழ்கிய பயிர்களை விவசாயிகள் மிகுந்த சிரமத்துடன் கையால் அறுவடை செய்யும் நிலைமை உள்ளது. வயிலில் தண்ணீர் தேங்கி நிற்பதால், முழுமையாக அருவடை செய்ய முடியவில்லை. கடந்த இரு வருடங்களாகப் பருவமழை பெய்யாததால், விவசாயம் செய்ய முடியவில்லை. இந்த ஆண்டு பருவமழை சரியாகப் பெய்ததால், நெல் பயிரிட்ட நிலையில் மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் முழுவதும் 10,000 ஏக்கருக்கும் அதிகமான நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால், பெரும் பாதிப்பு ஏற்பட்டி  ருப்பதால், அரசு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.