3660 டன் அரிசி இறக்குமதி: ஆதங்கத்தில் டெல்டா விவசாயிகள்..!

காவிரி டெல்டா மாவட்டங்களுக்குப் பொதுவிநியோகத் திட்டத்தில் அரிசி வழங்குவதற்காக, 3660 டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து, 3660 டன் அரிசி ரயில்மூலம் தஞ்சாவூர் கொண்டு வரப்பட்டது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகள்மூலம் பொதுமக்களுக்கு இவை விநியோகம் செய்யப்பட உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதலில் மத்திய மாநில அரசுகள் ஆர்வம் காட்டுவதில்லை.

வறட்சி இல்லாத காலங்களில், விளை ச்சல் நன்றாக இருந்த ஆண்டுகளிலும்கூட போதிய அளவு கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. இந்த ஆண்டு சம்பா நெல் சாகுபடி  சிறப்பாக நடைபெற்று, விறுவிறுப்பாக அறுவடை நடைபெற்றுவருகிறது. நெல் கொள்முதல் நிலையங்கள் முழுமையாகத் திறக்கப்படாததால், விவசாயிகள் தங்களது நெல்லை விற்பனைசெய்ய முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகிவருகிறார்கள்.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது, இங்குள்ள விவசாயிகளை ஆதங்கத்தில் ஆழ்த்தியுள்ளது. நாங்கள் உற்பத்திசெய்யும் நெல்லை கொள்முதல் செய்ய மறுக்கிறார்கள். ஆனால் வெளிமாநிலத்திலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது. இது, எங்களை அவமானப்படுத்துவதுபோல உள்ளது என்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!