அறுவடை நேரத்தில் விவசாயிகளுக்கு நேர்ந்த சோகம்..!

அரியலூரில், நெல் கதிரடிக்கும் இயந்திரம் சாய்ந்து பெண் கூலித் தொழிலாளி பலியாகியுள்ளார். மேலும் 2 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வு, விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 

                          

அரியலூர் மாவட்டம் செந்துறையில், பெருமாள் கோயில் பின்புறம் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த வயல்களில் தற்போது அறுவடை ஆரம்பித்துள்ளது. அறுவடைக்காக இயந்திரம் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள வயலில் நெல் அறுவடை செய்வதற்காக அதிக்குடிக்காட்டைச் சேர்ந்த பெண் தொழிலாளிகளான அன்னக்கிளி, பழனியம்மாள் மற்றும் அசலம்பாள் ஆகியோர் இயந்திரத்தின் பின் பகுதியில் உக்கார்ந்திருக்கிறார்கள்.

                              

அப்போது, நெல்கதிர் அடிக்கும் இயந்திரம் வயல் வரப்பின் மேல் ஏறும்போது, கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புறக் கவிழ்ந்ததால்,  வண்டியின் அடியில் சிக்கிக்கொண்ட பெண் கூலித் தொழிலாளிகள் 3-பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள், சிகிச்சைக்காக அரியலூர் அரசு பொதுமருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். செல்லும் வழியிலேயே அன்னக்கிளி என்பவர் உயிரிழந்தார்.  பழனியம்மாள், அசலாம்பாள் இந்த இருவரும் அரியலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து செந்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

                            

 போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், கதிர் அடிக்கும் இயந்திரத்தை ஓட்டியவர், குடித்திருந்ததாகத் தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில், டிரைவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!